[ad_1]





நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் செயல்பட்டு வரும் கல்லூரியின் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்றுமாறு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.




நெல்லையை அடுத்த அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் 2,500 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த 66 கல்லூரிகளும் 6 உறுப்புக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் மொத்தம் 73,000 மாணவர்கள் கல்வி பெற்று வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி வரும் 12-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட உள்ளது. இந்தக் கல்லூரியின் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வரான வேலம்மாள் தலைமையில் நடந்த கூட்டத்துக்குப் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் குறிச்சி சுலைமான், செயலாளர் லெட்சுமணன், பொருளாளர் குருச்சந்திர பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில், பெற்றோர்-ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் அனைவரும் கல்லூரியின் வளர்ச்சி குறித்தும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பாகவும் விரிவாகப் பேசினார்கள். கடந்த 5 வருடங்களாகத் தனியார் கட்டடத்தில் இயங்கி வந்த இந்தக் கல்லூரி வரும் 12-ம் தேதி சொந்தக் கட்டடத்துக்கு இடம் மாற உள்ளது. 


இந்த நிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வரும் 12-ம் தேதி கல்லூரியில், மாணவர்களுக்குத் தேவையான ஃபர்னிச்சர் வசதிகளை ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், கல்லூரியின் அருகில் பண்பொழி. சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ளது. கல்லூரிக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக அமைந்துள்ள அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும். அதை இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்