[ad_1]





நெல்லையில் டெங்குக் காய்ச்சலுக்கு கர்ப்பிணிப் பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டெங்கு பரவுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. 




நெல்லை மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலின் தீவிரம் அதிகரித்தபடியே இருக்கிறது. அரசு சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் டெங்குக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. டெங்கு பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும்நிலையில், உயிரிழப்புகளும் தொடர்ந்தபடியே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

மேலப்பாளையம் அக்பர் தெருவைச் சேர்ந்தவர் சம்சுல் ஆலம். தற்போதும் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் சனோபர் என்பவருக்கும் இடையே ஓராண்டுக்கு முன்பு திருமணமான நிலையில், சனோபர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காததால் இன்று உயிரிழந்தார். டெங்குக் காய்ச்சலுக்கு 7 மாத கர்ப்பிணிப் பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் வகையில் சுகாதாரப் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று அந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.



மகாராஜநகர் மற்றும் உழவர் சந்தை அருகிலுள்ள மாநகராட்சி வணிக வளாகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா தூய்மைப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணிகளைப் பார்வையிட்டார். மகாராஜநகர் பகுதியில்; செயல்பட்டு வரும் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தில் டெங்கு உருவாக்கும் கொசுக்களின் புழுக்கள் இருந்ததைக் கண்டுபிடித்த அவர், அந்த நிறுவனத்துக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்தார். 


அத்துடன், அங்குள்ள கெமிக்கல்ஸ் கடையில் கொசுப்புழுக்கள் இருந்ததால் அந்தக் கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கவும், அபராதம் விதிக்கவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். பின்னர் அங்கு பழைய வாகனங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள டயர்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள கடைகளுக்குச் சுகாதாரமின்மைக்காக நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். இந்தப் பகுதியில் டெங்குக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், சுகாதாரப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டார். 
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்