[ad_1]
Chennai:
தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், இன்னும் இரண்டு மூன்று நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
வட கிழக்குப் பருவமழை கடந்த 27-ம் தேதி தொடங்கி தீவிரமடைந்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியில் கடந்த சில நாள்களாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இந்நிலையில், தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இதனால், தென் தமிழகத்தில் கனமழையும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில், கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ச்சியாகக் கனமழை பெய்யவில்லை. ஆனால், மழைநீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2015-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளச்சேதம் மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் சென்னைவாசிகளிடம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்மழையால் 25 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளதால், அவர்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் புதிய கட்டுப்பாட்டு அறை சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம், குப்பை, தெருவிளக்குகள் பிரச்னை குறித்து 1913 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அளவில் மழை தொடர்பாக, பொதுமக்கள் தங்களின் புகார்களைக் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1070, மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு மையம் 1077 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் நோய்கள் குறித்து 24 மணி நேரமும் 104 என்ற எண்ணில் தொடர்புகொண்டு ஆலோசனை கேட்கலாம். அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் எண்ணைத் தொடர்புகொள்ளலாம். காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 100 என்ற எண்ணில் உதவி கேட்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று (நவம்பர் 2-ம் தேதி) கூறுகையில், ''அடுத்த 24-மணி நேரத்தில் தமிழகத்தில் தென் மாவட்டங்கள் ( ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை), புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் ( தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்), மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்று கூறினார்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. அதை அகற்ற முடியாமல் உள்ளாட்சி நிர்வாகம் திணறி வருகிறது. அதோடு மழை அவ்வப்போது பெய்து வருவதோடு, வடிகால் வசதியும் இல்லாததால் மழை நீரை அகற்றுவது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே, பள்ளிக்கூடங்களைத் திறப்பது குறித்து மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோர் கூடி இன்று ஆலோசனை நடத்தினார்கள். அதில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாகத் தமிழக அரசு அதிகாரிகள், சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். வானிலை ஆய்வு மையத்தின் பதிலைப் பொறுத்தே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் 6-ம் தேதிவரை இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தாக்கம் இருக்கும் என்றும் அது புயலாக மாற வாய்ப்பு இருக்கிறதா என்றும் அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு... 'புயல்' உருவாகுமா..?
TAGS :
COMMENTS