[ad_1]
Chennai:
எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் பற்றிய வழக்குகளை மாற்றக்கோரிய செம்மலையின் கோரிக்கையை நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம், எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பாக அனைத்து வழக்குகளையும் விசாரிக்கக் கோரிய மனுவை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், சசிகலாவின் தலைமையை ஏற்காமல், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்றார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, முதல்வர் பழனிசாமி அணியுடன் இணைத்துக்கொண்டது பன்னீர்செல்வம் அணி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, கொறடா பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது.
இந்நிலையில் தி.மு.க கொறடா சக்ரபாணி, உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தாக்கல்செய்தார். அதில், 18 எம்.எல்.ஏ-க்கள் போலவே கொறடா உத்தரவை மதிக்காமல் எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 12 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உள்ளிட்ட சட்டப்பேரவை தொடர்பான வழக்குகளைத் தலைமை நீதிபதி அமர்வுக்குத் தனி நீதிபதி ரவிச்சந்திர பாபு மாற்றினார்.
இதனிடையே தி.மு.க கொறடா சக்ரபாணி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அ.தி.மு.க எம்.எல்.ஏ., செம்மலை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "சபாநாயகரின் அதிகார வரம்புகுறித்த விசாரிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றத்துக்கே உள்ளது. ஆகவே, சபாநாயகரின் அதிகார வரம்புகுறித்து விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். சில நாள்களுக்கு முன்பு, செம்மலை சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வரும் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இன்று செம்மலையின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் பற்றிய வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று செம்மலை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தது.
எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்! செம்மலை கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!
TAGS :
COMMENTS