[ad_1]

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள மணலகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம், மணலகரம் கிராமத்தை சேரந்தவர் விவசாயி கலியபெருமாள். அந்த பகுதியில் இன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயலில் மடைகளைத் திறந்து வைப்பதற்காகச் சென்றுள்ளார். வயலின் குறுக்கே சென்ற மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை, எதிர்பாராமல் மிதித்ததில் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து, விவசாயி கலியபெருமாள் அதே இடத்தில் உயிரிழந்தார். 
இதுகுறித்து மணலகரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் பேசினோம், 'நீண்ட நாட்களாக அப்பகுதியில் உள்ள மின்கம்பத்திலிருந்து போகும் மின்கம்பிகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இதுகுறித்து ஏரியா லைன்மேனிடம் புகார் சொன்னோம்; ஆனால், புகாரை அவர் கண்டுகொள்ளவில்லை. மின்சார அலுவலகத்திற்கு சென்று அதிகாரியிடமும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆறு மாதங்களாகியும் மின்கம்பிகள் மாற்றப்படவில்லை. மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் இருப்பது ஆபத்தாகக் கூட முடியலாம் என்று நாங்கள் அப்பொழுதே எச்சரிக்கை செய்தோம். அதேபோல நடந்திடுச்சு’ என்றார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த விவசாயி கலியபெருமாளின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.