[ad_1]







சென்னை கொடுங்கையூரில் வீட்டின் முன்பு தேங்கிக்கிடந்த மழை நீரில் விளையாடிக்கொண்டிருந்த சகோதரிகள் இரண்டுபேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். கோயம்பேட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி சாலையோர பள்ளத்தில் வழுக்கி விழுந்து பலியானார்.


தமிழகத்தில், தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று மழை குறைந்த நிலையில், இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் மழைக்கு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கிநிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர். மேடு பள்ளம் தெரியாமல் பலர் தவறி விழுகின்றனர். சுரங்கப்பாதைகள், மழை நீரால் நிரம்பிவழிகின்றன. சாலையில் நடந்துசெல்லும் மக்கள், அச்சத்துடனேயே செல்கின்றனர். சென்னை கோயம்பேட்டில், மழைநீர் தேங்கி நிற்பதால் வியாபாரிகள் கடும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர். தொழிலாளிகளும் வேலையின்றி உள்ளனர்.

இதனிடையே, அரியலூரைச் சேர்ந்த ராமர் என்பவர், கோயம்பேடு மார்க்கெட்டில் சுமைதூக்கும் வேலை செய்துவந்தார். தேங்கிக்கிடக்கும் மழைநீரில் மூட்டைகளைச் சுமந்து லாரிகளில் ஏற்றிவந்துள்ளார். இன்று காலையும் அவர் மூட்டைகளைத் தூக்கிவந்துள்ளார். அப்போது, மழைநீர் தேங்கிக்கிடந்த சாலையோரப் பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த ராமர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கிய இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் வசித்து வந்த இரண்டு சிறுமிகள் வீட்டின் முன்பு தேங்கிக்கிடந்த மழை நீரில் விளையாடி உள்ளனர். அப்போது, அறுந்து கிடந்த மின்கம்பத்தில் மிதித்துள்ளனர். இதில் இரண்டு சிறுமிகள் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக இரண்டு பேரும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்த இறந்த இரண்டு பேரும் சகோதரிகள் என்றும் இவர்கள் பெயர் யுவஸ்ரீ, பாவனா என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

"மின்கம்பு அறுந்துகிடப்பதாக மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தோம். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் இரண்டு உயிர்கள் போயிருக்காது" என்று பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்