[ad_1]

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ளது கண்ணந்தாங்கல் ஏரி. இந்த ஏரி நீரால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையின்போதும் இந்த ஏரி உடைந்தது. இதையடுத்து, ஏரியை சீரமைத்துத்தரக் கோரி, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு அளித்துவந்தனர். பொதுப்பணித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்களே மணல் மூட்டைகளைக் கொண்டுவந்து அடுக்கினார்கள். ஆனால், இதுவரை பொதுப்பணித்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த மழையால் கண்ணந்தாங்கல் ஏரி நிரம்பியது. இன்று காலை, கலங்கல் பகுதியில் உடைந்து, ஏரி நீர் முழுவதும் வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.





அதுபோல, செங்கல்பட்டு அருகே உள்ள நந்திவரம், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் நிறைந்துவருகின்றன. 2015-ம் ஆண்டு பெய்த கனமழையில், நந்திவரம் ஏரியையும் கிளாம்பாக்கம் ஏரியையும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வெடிவைத்துத் தகர்த்தனர். இதனால், வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. ஜி.எஸ்.டி சாலையில் வெள்ளம் சென்றதால், தமிழக அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நந்திவரம் ஏரி நிறைந்ததால், அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் நீர் புகுந்துள்ளது. அதனால், அதை வெடிவைத்துத் தகர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. காயரம்பேடு ஊராட்சியில் உள்ள விஷ்ணுபிரியா நகர் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஊரைவிட்டு வெளியேறத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஏரிகள் உடையாமல் இருக்க, போதுமான அளவில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.