[ad_1]

விபத்து வழக்கில் சாட்சியம் அளிக்க வராமல் புறக்கணித்த காவல் துணை கண்காணிப்பாளருக்கு ராமேஸ்வரம் நீதிமன்றம் பிடிவாரன்ட் மற்றும் அபராதம் விதித்துள்ளது.

ராமேஸ்வரம் தனுஷ்கோடி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் கண்ணன். இவர் பதவி உயர்வு பெற்று சேலம் கிழக்கு மாவட்ட குற்ற துணை ஆணையராக இருந்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட முகுந்தராயர் சத்திரம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு நேர்ந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.



ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க வர கோரி துணை ஆணையர் கண்ணனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் கண்ணன் ஆஜராகவில்லை.

இதையடுத்து, நீதிமன்றம் பலமுறை அழைப்பு அனுப்பியும் சாட்சியம் அளிக்க ஆஜராகாமல் புறக்கணித்த துணை ஆணையர் கண்ணனுக்கு ஜாமினுடன் கூடிய பிடி ஆணையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் ராமேஸ்வரம் நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.