[ad_1]

மக்கள் பாதை அமைப்பின் சார்பாக வரும் 19-ம் தேதி சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ் உரையாற்ற இருக்கிறார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சேலம் மக்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் செய்து வருகிறார்கள்.



இந்தக் குழவினர் கடந்த வாரத்திலிருந்து சிறப்பு பிரசாரப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். புதிய 2,000 ரூபாய் நோட்டு மாடலில் துண்டுப்பிரசுரம் அச்சடித்து அதை விநியோகம் செய்து வருகிறார்கள். செல்ஃபி எடுப்பது போன்றும் விளம்பரம் செய்து வருகிறார்கள். இவர்களின் விளம்பர யுக்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



இதுபற்றி மக்கள் பாதை அமைப்பின் சேலம் ஒருங்கிணைப்பாளர் கெளதம் பேசும்போது, 'தமிழக அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி அனைவருக்கும் நன்றாகவே தெரியும். கட்டுப்படுத்த ஆள் இல்லாததால் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. நாங்கள், 'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்ற ஒற்றை முழக்கத்தோடு சகாயம் அய்யாவின் வழிகாட்டுதலில் பயணிக்கிறோம்.

வரும் 19-ம் தேதி சகாயம் அய்யா சேலத்துக்கு வர இருக்கிறார். காலையில் சேலத்தில் நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமியைத் திறந்து வைக்கிறார். இந்தப் பயிற்சி மையம் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் இலவசமாகப் படித்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகள் எழுத முடியும். அதே தினத்தில் அன்று மாலை சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் கோட்டை மைதானத்தில் லஞ்சம் ஊழலுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.மக்கள் பாதை சார்பாக முதன் முதலாக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் சகாயம் உரையாற்ற இருக்கிறார். இக்கூட்டத்துக்கு சுமார் 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.