[ad_1]

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது சுந்தரமுடையான் கிராமம். இந்த கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது சீனியப்ப தர்ஹா. இந்த தர்ஹாவிற்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மாற்று மதங்களைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்களும் நேர்த்தி செலுத்தச் செல்வது வழக்கம். இந்த தர்ஹாவினை அடுத்து நூற்றுக்கணக்கான மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.  
இந்த மீனவ குடும்பங்கள் உள்ள பகுதிக்கு செல்ல கடற்கரை ஓரமாக தார் சாலை ஒன்று போடப்பட்டிருந்தது. இந்த சாலை அவ்வப்போது ஏற்படும்  கடல் சீற்றங்களினாலும், கடல் அரிப்பினாலும் சேதம் அடைந்து வந்தது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க கூடிய தடுப்பு சுவர் கட்டப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூழலில் கடல் அரிப்புக்கு உள்ளான இந்த சாலையினை ஒட்டியிருந்த அரசு புறம்போக்கு நிலத்தின் வழியாக தங்கள் குடியிருப்புகளுக்கு மீனவ மக்கள் சென்று வந்தனர். இந்நிலையில் இந்த புறம்போக்கு நிலமும் தற்போது தனியார் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு  வேலி அடைக்கப்பட்டிருப்பதால் மீனவர்கள் அதன் வழியாக செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. 
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் என அனைவரும் கடலில் இறங்கி அதன் வழியாகத்தான் சென்று வருகின்றனர். தற்போது பருவமழை காலம் என்பதால் அதிகரிக்கும் கடல் அலைகளால் அவ்வழியே செல்லும் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைப்பதுடன், கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்புச் சுவர் அமைத்து தர சீனியப்பா தர்ஹா பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.