[ad_1]



“தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் ஒரேநேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து 187 இடங்களில் ரெய்டு நடத்தியது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை”. சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட குடும்பங்களில், நண்பர்கள் வீடுகளில், அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமானவரித் துறையினர் சொன்ன வாசகம்தான் அது.  


இந்தச் சோதனையில் வருமானவரித் துறையின் ஒட்டுமொத்த பார்வையும் சசிகலா அண்ணன் ஜெயராமன் மகன் விவேக் குடும்பத்தின் மீதுதான் இருந்தது. தமிழகத்தில் ஐந்து நாள்களாக நடந்த இந்தச் சோதனையில் 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான கணக்கில் வராத சொத்து ஆவணங்களும், கிலோ கணக்கில் தங்க, வைர நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் ரெய்டு நடக்காதபோதும், புதுச்சேரி அருகேயுள்ள அவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் ரெய்டு நடந்தது. ரெய்டுக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய தினகரன், “இது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. தற்போது கட்சியைக் கைப்பற்ற நினைப்பவர்களின் தூண்டுதலின்பேரில்தான் இந்த ரெய்டு நடைபெற்றுள்ளது. இந்த அச்சுறுத்தல்களைக் கண்டு பயப்படமாட்டோம். எங்களை அரசியலைவிட்டு ஒதுக்கிவைக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் சதி நிறைவேறாது. எங்களின் கட்சி சிறிய அளவிலானது என்று கேலி செய்கின்றனர். எங்களின் பலம் தேர்தல் வரும்போது தெரியும்” என்றார். 

அதேபோல், விவேக் ஜெயராமன் கட்டுப்பாட்டில் தற்போது இயங்கும் ‘ஜெயா டி.வி.’, ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ், ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றின் அலுவலகங்கள், விவேக் வீடு, அவரின் சகோதரி கிருஷ்ணபிரியா வீடு, விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீடு, விவேக் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் மிடாஸ் சாராயத் தொழிற்சாலை, கொடநாடு எஸ்டேட் போன்றவற்றிலும் வருமானவரித் துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது. 



இந்தச் சோதனைக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த விவேக், “வருமானவரித் துறை சோதனையின்போது, நான் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களின் கணக்கு, வழக்குகள் குறித்து விளக்கம் கேட்டனர். அதற்குப் பதில் சொன்னேன். திருமணத்தின்போது எனது மனைவிக்குப் போடப்பட்ட நகை குறித்து விவரம் கேட்டனர். நான் முறையாகக் கணக்குக்காட்டி வரி கட்டுகிறேன். இந்தச் சோதனையில் விளக்கம் கேட்டுள்ளார்கள், அவ்வளவுதான். பதில் சொல்லி இருக்கிறேன். இனி எப்போது அழைத்தாலும் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

சசிகலா தரப்பு குடும்பத்தில் சோதனை நடத்தப்பட்டிருப்பது குறித்து மன்னார்குடி உறவுகளிடம் பேசினோம். “உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் நடராசனைப் பார்க்க, சசிகலா பரோலில் வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் விவேக். தினகரன் ஏற்கெனவே இருமுறை சசிகலாவுக்குப் பரோல் கோரி முயற்சி செய்தபோதிலும், அப்போது அது தள்ளிப்போனது. ஆனால், விவேக் சார்பில், தமிழகக் காவல் துறையின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாநில அரசின் சார்பில் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே சசிகலாவுக்குப் பரோல் கிடைத்தது. மேலும், சசிகலா எங்கு தங்க வேண்டும், யாரைச் சந்திக்க வேண்டும் என எல்லாவற்றையும் விவேக்தான் முடிவுசெய்தார். அத்துடன், மீண்டும் சசிகலாவைப் பத்திரமாகச் சிறைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்வரை விவேக் அனைத்தையும் கவனித்துக்கொண்டார். அவரின் இந்த நடவடிக்கைகள் சசிகலாவின் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சமயத்தில், தினகரன் சார்பில், ஓ.பன்னீர்செல்வம் மீதும், எடப்பாடி பழனிசாமி மீதும் புகார் வாசிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து கட்சியைக் காப்பாற்றத்தான் தனியாளாகப் போராடிக் கொண்டிருக்கிறேன் என்றும், குடும்பத்தில் இருப்பவர்களே தனக்குக் குடைச்சல் கொடுக்கும் வேலைகளைச் செய்கிறார்கள் என்றும் புகார் சொல்லப்பட்டது. அதேபோல் விவேக்கும், திவாகரனின் மகன் ஜெயானந்தும் புகார் வாசித்துள்ளனர். இதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வந்த சசிகலா, கட்சியைத் தினகரனிடமும், சொத்துகள் தொடர்பான நிர்வாகத்தை விவேக்கிடமும் ஒப்படைத்துள்ளார். இதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்” என்றனர். 



சசிகலாவின் இந்தக் கருத்தை மன்னார்குடி உறவுகள் அப்போதைக்கு ஏற்றுக்கொண்டாலும், அவர்களுக்குள் பனிமோதல் நீடித்து வருவதாகவே கூறப்படுகிறது. தினகரன் மட்டுமே அ.தி.மு.க. அம்மா அணியில் முன்னிலைப்படுத்தப்படுவதை, விவேக் தரப்பு விரும்பவில்லை என்று தெரிகிறது. அவர்களுக்குள் ஏதோ மனக்கசப்பு உள்ளதாகவும், நிர்வாகத்திலும், அரசியலிலும் இரண்டு தரப்பும் தங்கள் தலையீட்டை அதிகரிக்க நினைத்ததாகவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற சூழலில், பணப் பரிமாற்றமும் நடைபெற்றதாகவும், அது குடும்பத்துக்குள் ஏற்கெனவே இருந்த பிரச்னைகளை மேலும் அதிகரிக்கச் செய்து, விவேக், தினகரன் என இரண்டு அணிகளாகப் பிரியும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

இதனைத் தெரிந்துகொண்ட இரு தரப்பிலும் உள்ள சிலர், திட்டமிட்டு வருமானவரித் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததன்பேரிலேயே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘ஜெயா டி.வி.’ யில், தினகரன் ஆதரவு செய்திகளையும் தமிழக அரசுக்கு எதிரான செய்திகளையும் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தாலும், விவேக்குக்கும், தினகரனுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் கருத்துவேறுபாடுகள் நிலவியதாம். ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்ற பழமொழிக்கேற்ப சசிகலா குடும்பத்துக்குள்ளேயே அவரின் சொந்தங்கள் இரு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இதைப் பயன்படுத்தி இந்தச் சோதனைமூலம் மேலும் அவர்களைப் பலவீனப்படுத்திவிடலாம் என்பது தற்போதைய ஆட்சியாளர்களின் கணக்கு.


இதனை உணர்ந்து, இரு தரப்பினரும் நடந்து கொண்டால் சரி... அ.தி.மு.க-வில்தான் இரு அணிகள் என்றால், தற்போது மன்னார்குடி உறவுகளிலும் அணிகள் உருவாகி இருப்பது, சசிகலா குடும்பத்தினர் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");