[ad_1]

Chennai: 

வினோதினி, வித்யா, வினுப்ரியா, நவீனா, சோனாலி, பிரான்சினா, மோனிஷா, தன்யா, சோனியா இந்தப் பெண்களெல்லாம், சமீப ஆண்டுகளில் ஆண்களால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டவர்கள். ‘நான் காதலித்தேன்.. அவள் என் காதலை ஏற்கவில்லை! இருவரும் காதலித்தோம்... அவள், என்னைப் பிரிந்து சென்றுவிட்டாள்!’ கொலைக்காரர்கள் மீண்டும் மீண்டும் சொல்லும் இரண்டே இரண்டு காரணங்கள் இவைதான். ஒவ்வொரு முறையும் ஒரு பெண் கொல்லப்படும்போது கோபத்தின் உச்சிக்குச் செல்லும் நாம் அடுத்த இரு தினங்களில் அதை எளிதாகக் கடந்து சென்றுவிடுகிறோம். அப்படிக் கடந்து நாம் சென்றதினால் தற்போது மற்றுமோர் உயிர் அதே காரணத்தால் கொல்லப்பட்டிருக்கிறது. மேலும், இரு உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கிறன.


சென்னை ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். கனடாவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி ரேணுகா மற்றும் மூத்த மகள் இந்துஜா, இளைய மகள் நிவேதா, மற்றும் மகன் மனோஜ் ஆகியோருடன் வசித்துவருகிறார். இவர்கள் சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்துஜா பொறியியல் படித்துவிட்டு தற்போது சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 13-ம் தேதி வேளச்சேரி பாண்டித்துரை தெருவைச் சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபர் இந்துஜாவின் வீட்டுக்குச் சென்று இந்துஜா மற்றும் அவரது தாயார் ரேணுகா, தங்கை நிவேதா மீது தான் கேனில் கொண்டுவந்திருந்த பெட்ரோலை ஊற்றி லைட்டரால் தீப்பற்ற வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீப்பற்றி எறிந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த ஆகாஷை ஆதம்பாக்கம் போலீஸார் இரவோடு இரவாக தேடி கைது செய்துவிட்டனர்.

போலீஸாரிடம் பேசினோம். “வேளச்சேரியில் உள்ள குருநானக் பள்ளியில் இந்துஜா படித்துக்கொண்டிருக்கும் போது அதே பள்ளியின் சீனியராக இருந்தவர் ஆகாஷ். நாளடைவில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. பிறகு இந்துஜா பொறியியல் கல்லூரியிலும், ஆகாஷ் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் கல்லூரியிலும் சேர்ந்திருக்கிறார்கள். இருவருக்குமிடையில் இருந்த நட்பு காதலாக மாறியுள்ளது.

இவர்களின் காதல் இருவர் வீட்டுக்கும் தெரியவர... முதலில் படிப்பு முடியட்டும் என்று பின்பு பார்க்கலாம் என்று இந்துஜாவின் வீட்டில் சொல்லியிருக்கிறார்கள். இந்தநிலையில் ஆகாஷ் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டோடு கல்லூரிப் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார். கல்லூரி படிப்புக்குப் பின் மென்பொருள் நிறுவனத்தில் இந்துஜாவுக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால், ஆகாஷ் வேலை எதுவும் இல்லாமல் ஊர் சுற்றி வந்திருக்கிறார். இந்துஜாவை தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி இந்துஜாவின் வீட்டில் ஆகாஷ் பலமுறை பேசியிருக்கிறார். ஆனால், இதுசரிப்பட்டு வராது என இந்துஜாவின் தாய், தங்கள் உறவினர் பையனுக்கு இந்துஜாவை திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தார். 

இந்தநிலையில்தான் கடந்த 13 தேதி கேனில் பெட்ரோல் எடுத்துக்கொண்டு இந்துஜாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பெட்ரோல் கேனை வீட்டின் வெளியில் வைத்துவிட்டு இந்துஜா மற்றும் அவரது தாயாரிடம் ‘இந்துஜாவை எனக்குத் திருமணம் செய்துகொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். அவர் முடியாது என்று கூற வீட்டுக்கு வெளியில் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்துவந்து இந்துஜாவின் மேல் பெட்ரோலை ஊற்றியுள்ளார். தடுக்க வந்த தாய் ரேணுகா மற்றும் தங்கை நிவேதா மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு பைக்கில் தப்பியோடிக்கிறார். ‘எனக்குக் கிடைக்காத அவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது. அதனால்தான் பெட்ரோல் ஊற்றி எரித்தேன்’ என்று ஆகாஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்’’ எனக் கூறினர். தற்போது இந்துஜாவின் தாய் ரேணுகாவும், தங்கை நிவேதாவும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபோன்ற காதல் கொலைகள் நடப்பதற்கான காரணங்களை உளவியல் நிபுணர் டாக்டர் சுமதி சந்திரசேகர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ‘‘இது போன்ற குற்றங்கள் அதிகமாக இம்பல்சிவ் பிஹேவியர் யூத்களால் (impulsive behaviour youths) தான் பெரும்பாலும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அவள் தனக்குக் கிடைக்கவில்லை எனும் போது ‘இவளால்தான் தனக்கு மனக்காயம் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை பறிபோய்விட்டது’ என்று எண்ணி அவளைப் பழிவாங்க வேண்டும் என்ற தேவையில்லாத எண்ணங்களையும் அதற்கான செயல்களையும் செய்ய துணிந்துவிடுகிறார்கள். புரிந்துகொண்டு காதலிப்பவர்கள் பிரிந்துவிட்டால் வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கிப் பயணப்பட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இவர்களுக்கு வாழ்க்கையே போய்விட்டது இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற உடனடி பதற்றம் தொற்றிக்கொள்கிறது. இதனால் தன்மீது ஒரு இயலாமை எண்ணம் அவர்களுக்குள் ஏற்படுகிறது. அந்த இயலாமை எண்ணமே இதுபோன்ற செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. இதுபோன்ற நேரங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளை நன்கு கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளிடம் இதுபற்றி ஆலோசிக்கலாமா என்று பலரும் தயங்குகிறார்கள். இது தவறு. மேலும் பிள்ளைகள் மொபைல் போன், கம்ப்யூட்டரில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் தெரிந்துவைத்துக்கொள்ளுதலும் அவசியமான ஒன்று. பெற்றோர்களும், குழந்தைகளும், உறவினர்கள், மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சகஜமாக மனம் விட்டுப் பேச வேண்டும். இல்லையென்றால் ஒரு வித தனிமையுணர்வு ஏற்பட்டுவிடும். 

மொபைல் போனும், கம்ப்யூட்டரும் ஒருபோதும் அந்தத் தனிமை உணர்வைப் போக்காது. மேலை நாடுகளில் அரசாங்கமே, சமூக சுகாதார மையம் (Community health centre) ஆரம்பித்து அனைவருக்கும் மன அழுத்தங்கள் பற்றியும், மனதை எப்படி ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்லித் தருவார்கள். அதுபோல நமது அரசும் மக்களுக்கு மனஅழுத்தம் மற்றும் அதிலிருந்து தம்மை விடுவித்தல் குறித்த சிறப்புப் பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும்” என்றார்.


பெண் என்ன செய்கிறாள், எங்கு செல்கிறாள் எனப் பெண்கள் வளர்ப்பில் தீவிர அக்கறை காட்டும் இந்தச் சமூகம், ஏனோ ஆண்களின் வளர்ப்பில் அதை மறந்துவிடுகிறது!

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");