[ad_1]

”ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லையென்றால் அவர்களின் ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பபடுவது ஏன்?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.



புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் முதன் முறையாக இன்று கொண்டாடப்பட்ட குழந்தைகள் தின விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் கலந்துகொண்டனர். அப்போது ”புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஆலோசனைகளைக் கூறுங்கள்” என்று விழாவில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார் கிரண்பேடி. அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், `டெல்லியில் நடைபெற்ற ஆளுநர் மாநாட்டில், ஆளுநர்கள் பொதுமக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நம் பிரதமரும் குடியரசுத் தலைவரும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆளுநர்கள் மக்களுடன் தொடர்பில் இல்லாமல் இருப்பதற்காகவா அவர்களுக்கு அவ்வளவு பெரிய மாளிகைகள் கொடுக்கப்பட்டுள்ளது? ஆளுநர்கள் மக்களோடு தொடர்பில் இல்லாமல் போனால் ஆளுநர் மாளிகை என்பது தனிமைச் சிறை போல் ஆகிவிடும். அதிகாரிகளுடனும் மக்களுடனும் தொடர்பில் இருப்பதுதான் ஆளுநர்களின் வேலை. அந்த விதத்தில் தமிழக ஆளுநர் ஆய்வு செய்வதற்கு அதிகாரம் இருக்கின்றது. ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லையென்றால் கோப்புகள் எதற்கு அவரின் ஒப்புதலுக்காக அனுப்பபடுகிறது? மக்களிடம் தொடர்பில் இருப்பதும் அவர்களுக்கு சேவை செய்வதும்தான் ஒவ்வொரு அரசு அதிகரியின் கடமை. இது ஆளுநர்களுக்கும் துணைநிலை ஆளுநர்களுக்கும் பொருந்தும். பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதை நீதிமன்றமே முடிவு செய்யும். புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்படக் கூடிய திறமை வாய்ந்த மனிதர். அவர் புதுச்சேரிக்கு தலைமைச் செயலாளராக வந்திருப்பது மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்' என்று தெரிவித்தார்.