[ad_1]





தமிழகக் காவல்துறைக்கு உறுதுணையாக ஊர்க்காவல் படையினர் 16,000 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்குரிய ஊதியம் வழங்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை ஏற்காமல் தமிழக அரசு உதாசீனப்படுத்துவதாக ஊர்க்காவல் படையினர் குமுறுகின்றனர்.  




தமிழகக் காவல் துறையினர் செய்யும் பணிக்கு இணையாக ஊர்க்காவல் படையினர் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், இவர்களுக்கு வழங்கும் ஊதியமோ மிக, மிகக் குறைவானது. மாதம் முழுவதும் காவலர்களுக்கு இணையாகப் பணிபுரியும் இவர்களுக்கு, 25 நாள்கள் வேலை செய்ததாகக் கணக்குக்காட்டி நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.150 தான் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. இந்தச் சம்பளத்தில் எப்படி வாழ்க்கையை நடத்தமுடியும் என்று போராடிய ஊர்க்காவல் படையினர், பலமுறை அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் அரசு செவி மடுக்காததால் நீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்காகத் தொடுக்கப்பட்ட ஊர்க்காவல் படையினரின் ஊதியப் பிரச்னையை அலசி, ஆராய்ந்த நீதிமன்றம் தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியமான ரூ.560ஐ தினக்கூலியாக ஊர்காவல் படையினருக்கும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.  


இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத ஊர்க்காவல்படை காவலர் ஒருவரிடம் பேசியபோது, ''இத்தனை ஆண்டுகாலம் காவல்துறையினர் பணிக்கு ஈடாகவும், அதற்கு மேலாகவும் அவர்கள் இடும் கட்டளைகளைச் செய்து வந்தோம். ஆனால், காக்கி உடை எங்களுக்குக் கௌரவத்தை தந்ததே ஒழிய, மாத சம்பளம் வெறும் ரூ.3750 என்பதை இந்தக் காலத்தில் யார் ஏற்றுக்கொள்வார்கள்? திருமணமாகாத எங்களுக்கெல்லாம் பெண் கொடுக்கவே மறுக்கிறார்கள். கேவலமாய்ப் பார்க்கிறார்கள். இதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். எங்கள் நிலையை ஆராய்ந்து தினக்கூலியாக ரூ.560 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவைக்கண்டு அகமகிழ்ந்தோம். ஆனால், தமிழகக் காவல்துறை தலைவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், எங்களுக்கு ஐந்து நாள்கள் மட்டும்தான் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அதே ஊதியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளார். ஆனால், மாதம் முழுவதும் எங்களைப் பணிபுரிய அழைக்கிறார்கள். உச்சநீதிமன்ற சம்பளமும் வழங்கவில்லை. எந்த ஐந்து நாள்களில் பணிபுரிய வேண்டும் என்ற அறிவிப்புமில்லை. எனவே, மாதம் முழுவதும் காவல்துறையிடம் இணைந்தே உழைக்கிறோம். ஆனால், எங்கள் நிலை பழையபடியேதான் இருக்கிறதே ஒழிய, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவது போலவும், அதேநேரத்தில் எங்களைப் பழைய நிலையிலேயே வைத்திருப்பதும் தமிழக அரசின் இரட்டை நிலைப்பாடாக இருக்கிறது.  எங்கள் வேதனைக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றே தெரியவில்லை'' என்றார் கண்கலங்க.  
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்