[ad_1]

`இந்து மதத்துக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது' என்று பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

அனைத்திந்திய பட்டாசு தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு வந்த ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம், `இந்து மதத்தின் கலாசாரத்துடன் தொடர்புள்ள திருவிழாக்கள், பண்டிகைகளுக்கு எதிராக சிலர் வழக்குகள் போட்டு, முடக்கப் பார்க்கிறார்கள். பட்டாசு வெடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு போட்டதும் அந்த அடிப்படையில்தான். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தேசிய தினம் கொண்டாடும்போது பட்டாசு வெடிக்கிறார்கள். அதுபோல தீபாவளி கொண்டாடும்போது குழந்தைகளை மகிழ்விக்க பட்டாசு வெடிக்கிறோம். இது எப்படி தவறாகும். சுற்றுச்சூழல் கெடுகிறது என்று அனைத்து பட்டாசு ஆலைகளையும் மூடிவிடலாமா? ஏற்கெனவே பொங்கல் திருநாளின் ஒரு அங்கமான ஏறு தழுவதலுக்கு பீட்டா போன்ற வெளிநாட்டு என்.ஜி.ஓ.க்களால் நீதிமன்றம் மூலம் தடை போடப்பட்டது. இப்போது டெல்லி போன்ற சில நகரங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் மூலம் தடை போடப்படுகிறது. இது  நம் அடிப்படை கலாசார உரிமையைப் பறிக்கும் செயல்.




சமீபத்தில் ப்ளக்ஸ் வைப்பது பற்றி உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை போட்டுள்ளது. ப்ளக்சே வைக்கக் கூடாது என்று கூறியிருந்தால் அதில் ஒரு லாஜிக் இருந்திருக்கும். ஆனால், ப்ளக்சில்  உயிரோடு இருப்பவர்களின் படங்களை வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் எப்படி தீர்மானிக்கிறது என்று தெரியவில்லை. அது அந்த பேனரை வைக்கும் அமைப்புகளின் உரிமை. உதாரணத்திற்கு திருமணத்திற்கு ப்ளக்ஸ் வைப்பவர்கள் மணமக்களின் படங்களை வைப்பார்களா, செத்துப்போனவர்களின் படங்களை வைப்பார்களா?... இப்படி உள்ளது நீதிமன்றத்தின் உத்தரவுகள். அதுபோல பட்டாசு வெடிப்பதை தடை செய்ய சொல்வதும் தேவையற்றது' என்றார்.