[ad_1]





Theni: டி.டி.வி.தினகரன் உறவினர்கள், ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நேற்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். இரவைக்கடந்தும் இச்சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தினகரன் ஆதரவாளரும் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வுமான தங்க தமிழ்ச்செல்வனின் அலுவலக உதவியாளர் கனகராஜ் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூவர் தற்போது சோதனை நடத்திவருகிறார்கள்.





சம்பந்தப்பட்ட கனகராஜ் என்பவரை தங்க தமிழ்ச்செல்வன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று 10 நிமிடங்கள் அங்கேயே வைத்திருந்த பிறகு மீண்டும் அவர் வீட்டுக்கு அழைத்துவந்துள்ளனர்.

தற்போது சோதனை தொடர்வதையடுத்து தங்க தமிழ்ச்செல்வனிடம் போனில் பேசினோம், "அம்மாவின் விசுவாசிகள், அ.தி.மு.க தொண்டர்கள் அனைவருக்கும் புனித பூமியாக இருந்த, அவர் வாழ்ந்த இடமான கொடநாடு பங்களாவிலேயே சோதனை நடத்தினார்களோ அப்போதே புரிந்துவிட்டது. இப்போது நடக்கும் அரசு ஜெயலலிதாவுக்கு எதிரான அரசு என்று. அண்ணன் டி.டி.வி.தினகரனுக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைப்பதற்காகவும் அங்கிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் இங்கே வருவதைத் தடுப்பதற்காகவும் இப்படி ஒரு சோதனை நடத்தி மிரட்டிப்பார்க்கிறார்கள்.



இந்த எல்லைமீறிய செயலால், உண்மையான கட்சியின் விசுவாசிகள் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள் என்பதே கள நிலவரம். இதற்கெல்லாம் பயப்படும் ஆள்கள் நாங்கள் இல்லை. சட்டப்படி இதைச் சந்திப்போம்" என்றார். தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு வீட்டிலும் சோதனை நடத்த வாய்பிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்