[ad_1]
'கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்பு இல்லை. வெறும் மூன்று பேர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளார்கள்' என்று அலட்சியமாகக் கூறிய அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக, கடலூர் மாவட்ட விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.
இதுகுறித்து, "கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில், சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நீரில் மூழ்கிப் பயிர்கள் அழுகிக்கிடக்கின்றன. ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவுசெய்து நடவு நட்ட விவசாயிகள் நஷ்ட ஈடும் இல்லாமல், காப்பீடும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள். பல பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் உட்கார இடம் இல்லாமல் இருக்கிறார்கள். இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாகப் பேசியுள்ளார் அமைச்சர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் வந்து பார்க்காமல், உட்கார்ந்த இடத்தில் கருத்து சொல்வது என்பது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல இருக்கிறது.
ஏற்கெனவே, விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு இறந்தபோது, "கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் வறட்சியால் இறக்கவில்லை. அவர்கள் வயது முதிர்ந்து, நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்கள்" என்று இவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது, கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்பு இல்லை, வெறும் மூன்று பேர் மட்டுமே உயிரிழந்துள்ளார்கள் என்று அலட்சியமாகக் கூறியது பெரும் கண்டனத்துக்குரியது. ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவரே, விவசாயிகளின் வேதனை புரியாமல் பேசியுள்ளார். தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராகப் பேசும் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், மக்கள் மத்தியில் அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் வெடிக்கும்" என்கிறார்கள் விவசாயிகள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
’விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரே இப்படிப் பேசலாமா?’ - அமைச்சருக்கு எதிராகக் கொந்தளிக்கும் விவசாயிகள்
TAGS :
COMMENTS