[ad_1]





Chennai: 

சென்னை பேசின் பிரிட்ஜ் பாலத்தில் தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி பெற்றோர் கதறி வருகின்றனர். இதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது தெற்கு ரயில்வே நிர்வாகம்.


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த சில நாள்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. ஆனாலும், சாலைகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. மழைநீரால் கூவம் நிரம்பி வழிகிறது. இதனிடையே, சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்று ரயில்வே ஊழியர்கள் பார்த்து வருகின்றனர்.

இதனிடையே, நேற்று மாலை 3 மணிக்கு சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள பாலத்தில் தண்டவாளம் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 19 வயதுடைய கமலேஷ் என்ற ஊழியரும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கமலேஷ் திடீரெனத் தவறி கூவத்தில் விழுந்துள்ளார். உடனே, பணியில் இருந்த ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்க முற்பட்டுள்ளனர். ஆனால், இதை அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. 



இந்த நிலையில், "எங்கள் வீட்டுக்கு ரயில்வே ஊழியர் ஒருவர் வந்தார். கமலேஷ் வீட்டுக்கு வந்துவிட்டானா என்று கேட்டார். வேலை முடிந்து அவன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று கூறினேன். திரும்பத் திரும்ப அவர் போன் செய்துகொண்டே இருந்தார். அவன் வந்தவுடன் எனக்குத் தகவல் கொடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். நீண்ட நேரமாகியும் மகன் வீட்டுக்கு வராததால் வேலை செய்யும் இடத்துக்கு வந்தேன். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் எந்தப் பதிலும் சொல்லவில்லை. காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்களும் என் மகனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இரவு நேரத்தில் மகனின் செருப்பு, துணி மட்டுமே வந்தது. என் மகனைக் கண்டுபிடிக்க ரயில்வே அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கண்ணீர் மல்கக் கதறினார் கமலேஷின் தாய்.

கமலேஷின் சகோதரி கூறுகையில், "தம்பி காணவில்லை என்று தகவல் வந்ததும் ஆஸ்பத்திரியில் வேலையில் இருந்த நான் ஓடி வந்தேன். இங்கு வந்து பார்த்தால் கமலேஷைத் தேடும் பணியில் யாரும் ஈடுபடவில்லை. தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கவில்லை. ரயில்வே அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள்" என்று கண்ணீருடன் கூறினார்.


கமலேஷூடன் வேலை பார்த்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் கூறுகையில், கமலேஷ் கூவத்தில் தவறி விழுந்தபோது உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்க முயன்றோம். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் தடுத்துவிட்டனர்" என்றார். ரயில்வே அதிகாரிகள் அலட்சியத்தால் ஊழியர் கமலேஷின் நிலை என்னவென்றே தெரியாமல் பெற்றோர் கதறி வருகின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்