[ad_1]

Chennai: மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கு எதிராகப் பெரிய அளவில், எதிர்ப்புக்குரல் எழுப்பாமல் இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது மவுனம் கலைத்திருக்கிறது. குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து மத்திய அரசோடு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடும் விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கறுப்புப் பணம் ஒழிப்பு, ஜி.எஸ்.டி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, அதன் வேதனைகளைச் சொல்லி மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பலைகளை மக்களிடையே உருவாக்கி வருகிறார்கள். முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.




சென்னை சத்தியமூர்த்தி பவனில், 'மரகதம் சந்திரசேகர் நூற்றாண்டு விழா' நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாநில தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்தத் தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில், முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான  ப. சிதம்பரம் பேசினார். அவர் பேசுகையில், ''ஜனசங்கமாக உருவெடுத்து பல முகங்களைக் கண்டு இன்று அது நாட்டை ஆளும் பி.ஜே.பி-யாக உயர்ந்துள்ளது. அதை நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அந்தக் கட்சியில் அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் தலைவர்கள் இல்லை. குறிப்பாக அந்தக் கட்சியில் தலித் தலைவர்கள் யாரும் இல்லை. ஆனால், தலித், கிறிஸ்துவம், இஸ்லாம் என்று அனைத்து சமூகத்துக்கும் காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இருக்கிறார்கள். அந்தத் தலைவர்களை முன்னிலைப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி பெருமைப்படுகிறது. 

இந்தியா என்றால் இந்துத்துவா என்று மட்டுமே பி.ஜே.பி பார்க்கிறது. இந்தியா என்றால் இந்து முகம் என்றுதான் பார்க்கிறது. இந்து மக்கள்தான் இந்திய மக்கள்; மற்றவர்கள் அந்நியர்கள் என்று பி.ஜே.பி பார்க்கிறது. இது அந்தக் கட்சிக்கு மனதளவில் உள்ள வேறுபாடு அல்ல. செயல் அளவிலேயே இந்த வேறுபாடு புலப்படுகிறது. அதை வெளிப்படையாகவேச் செய்கிறார்கள். பிரிவினைவாத சிந்தனைதான் அவர்களிடம் மேலோங்கியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பிரிவினை உணர்வை விதைத்து வெற்றி பெறுகிறார்கள். அதை அவர்கள் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அதைப்போன்ற பிரிவினைவாத கொள்கை காங்கிரஸ் கட்சியில் இல்லை. நம் மீது எத்தனை பழி சொன்னாலும் தேச ஒற்றுமைக்காக நாம் பாடுபடுகிறோம். அனைத்துத் தரப்பு மக்களின் உயர்வுக்காகவும் நாம் பாடுபடுகிறோம். 



இப்போது, பி.ஜே.பி-யினர் நமது தலைவர்களை பார்த்துப் பழி சொல்கிறார்கள். சோனியாவையும் ராகுலையும் ஜாமீனில் வந்தவர்கள் என்று கிண்டல் செய்கிறார்கள். நீங்கள் போட்ட பொய் வழக்கிலிருந்து காவல் துறையும் நீதிமன்றமும் ஜாமீன் கொடுக்கிறது. அதனால் ராகுலும் சோனியாவும் ஜாமீனில் இருக்கிறார்கள். இந்தத் தலைவர்களை ஜாமீனில் உள்ள தலைவர்கள் என்று நாட்டு மக்கள் பார்க்கவில்லை. குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் தலைவர்கள் என்றுகூட பார்க்கவில்லை. இந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற வந்துள்ள தலைவர்கள் என்றுதான் அவர்களை நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். குற்றம் சுமத்துவதால், பழிசுமத்துவதால் மட்டுமே அந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று சொல்லிவிடமுடியாது.


பி.ஜே.பி-யை எதிர்க்க ராகுல்காந்தி புதிய வடிவம் எடுத்துள்ளார். பி.ஜே.பி-க்கு எதிராக ராகுல், போர் தொடுத்துள்ளார். அதனால், பி.ஜே.பி-க்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பும் இளைஞர்கள்  காங்கிரஸ் கட்சிக்குத் தேவை. அவர்கள், அனைத்து சமூகத்திலும் இருக்க வேண்டும். குறிப்பாக ஏழை - எளிய இளைஞர்கள் நம்மிடம் இருக்க வேண்டும். அதுவும் தன்னம்பிக்கை உள்ள இளைஞர்கள் தேவை'' என்று பேசினார்.