[ad_1]
Chennai:
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க தொடரப்பட்டுள்ள வழக்கை, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கோரி செம்மலை எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினர், முதல்வர் பழனிசாமி அணியோடு இணைந்துகொண்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, கொறடா பரிந்துரையின் பேரில், சட்டப்பேரவைத் தலைவர் தனபால் 18 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது.
இந்நிலையில் தி.மு.க கொறடா சக்ரபாணி, உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், 18 எம்.எல்.ஏ-க்கள் போலவே கொறடா உத்தரவை மதிக்காமல் எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 12 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உள்ளிட்ட சட்டப்பேரவை தொடர்பான வழக்குகளைத் தலைமை நீதிபதி அமர்வுக்கு தனி நீதிபதி ரவிச்சந்திர பாபு மாற்றினார்.
இதனிடையே, தி.மு.க கொறடா சக்ரபாணி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அ.தி.மு.க எம்.எல்.ஏ., செம்மலை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "சபாநாயகரின் அதிகார வரம்புகுறித்து விசாரிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றத்துக்கே உள்ளது. ஆகவே, சபாநாயகரின் அதிகார வரம்புகுறித்து விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், செம்மலை சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வரும் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என்று அறிவித்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான முடிவு தெரியவரும் என்று கூறப்படுகிறது.
செம்மலை மனு அவசர வழக்காக விசாரிக்கப்படும்! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
TAGS :
COMMENTS