[ad_1]
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகரப் பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அதனை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று நேரில் பார்வையிட்டார். மழைநீர் தேங்கியதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
நெல்லை பேட்டைப் பகுதியில் நரிக்குறவர் காலனியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த இடங்களை அவர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து குன்னத்தூர், செண்பகம்பிள்ளை மேலத் தெரு பகுதியில் மழை நீர் தெருவில் ஓடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார், கால்வாய் பகுதியில் மழைநீர் தடையின்றி விரைந்து செல்ல உடன் நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’நெல்லை மாவட்டத்தில் 13 இடங்களில் மழையளவு கணக்கிடப்படுகிறது. இதில் ஒரே நாளில் மொத்தம் 514 மி.மீ மழை பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 39 மி.மீ மழை பெய்துள்ளது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, பேட்டை பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நெல்லை மாவட்டத்தில் 125 இடங்கள் வெள்ளப் பாதிப்புப் பகுதிகளாகக் கண்டறியப்பட்டு அங்கு பேரிடர் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதால் மழையின் காரணமாகப் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.’’ எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நெல்லை மாவட்டத்தில் தொடரும் கனமழை: தேங்கிய நீரை வெளியேற்ற நடவடிக்கை!
TAGS :
COMMENTS