[ad_1]

கிராம ஊராட்சிகளின் செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தைக் கருவூலம் மூலம் வழங்கக் கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 424 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பணியாற்றும் செயலாளர்கள், அரசு அறிவிக்கும் திட்டங்கள் உள்ளிட்ட ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தினை நிர்ணயம் செய்து அதனை அரசு கருவூலம் மூலம் வழங்கக் கோரி வருகின்றனர்.



 

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்துச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அனைத்துச் சங்க ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தர் முன்னிலை வகித்தார். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறையின் ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் என  நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி வரும் 11-ம் தேதி சேலத்தில் மாநில அளவிலான மாநாட்டினையும் நடத்த உள்ளனர்.