[ad_1]

“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை” என அதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு அதிகாரி வினய்குமார் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான சசிகலா, சிறை விதிமுறைகளை மீறி அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், வெளியில் சென்றதாகவும், அதிக அளவில் பார்வையாளர்களைச் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியானதோடு, அதுபற்றிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.



சிறையில் கைதிகள் அனைவரும் சிறைச் சீருடைகளையே அணிய வேண்டும். ஆனால், சசிகலாவும் இளவரசியும் அவர்களின் சொந்த உடைகளையே அணிகின்றனர். சல்வார் கம்மீஸ், நைட்டி, புடவை உள்ளிட்ட வண்ண‌ உடைகளில் அவர்கள் சிறையில் வலம் வருகின்றனர். சிறையில் மேல் தளத்தில் தங்கியிருந்த சசிகலா, ஐந்து அறைகளைப் பயன்படுத்தியதாகவும், அந்த அறைகளில்... அவர் தனது சமையல் பாத்திரங்கள், துணிமணிகள், கட்டில், மெத்தை, எல்.இ.டி. டி.வி. உள்ளிட்ட பொருள்கள் வைத்திருந்ததாகவும் சொல்லப்பட்டது. இதுதவிர, வி.வி.ஐ.பி. வசதி, நவீன சமையலறை, உணவு, உதவியாளர்கள் எனப் பல வசதிகளைச் சிறை நிர்வாகம் ஏற்படுத்திக்கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்படிச் சொகுசு வசதிகளைச் சசிகலா பெற, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு அவர் இரண்டு கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார் என்கிற தகவலையும் அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா சொல்ல... கர்நாடகமே கதிகலங்கி நின்றது.

இதுதவிர சசிகலாவுக்கு மட்டுமல்லாது,போலி முத்திரைத்தாள் வழக்கில் தண்டனை பெற்றிருந்த அப்துல் கரீம் தெல்கிக்கும் சிறைக்குள் புதிய எல்.இ.டி. தொலைக்காட்சி, சிறப்பு உணவு, தனிப்பட்ட டயர்ட் சார்ட் ஆகியவை வழங்கப்பட்டிருந்தது என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் டி.ஐ.ஜி. ரூபா. இவை எல்லாம் நீதிமன்றத்தில் முறையான அனுமதி மற்றும் உத்தரவு இல்லாமல் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வசதிகள். இது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அதோடு, இந்திய அரசியல் சாசனத்தின் 14-வது அட்டவணையை மீறும் செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



ரூபாவின் இந்த அறிக்கையால் கர்நாடக அரசியல் பரபரப்புக்குள்ளாக... முதல்வர் சித்தராமையா, பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து அந்தப் பிரச்னைக்கு அப்போது ஒரு முடிவு கட்டினார். அதன்பிறகு, ரூபாவும் வேறொரு துறைக்கு மாற்றப்பட்டார். இருந்தாலும், ரூபா வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக சிறப்பு அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சிறையில் விதிமுறைகள் குறித்து விசாரணை செய்த வினய்குமார், “பரப்பன அக்ரஹாரா சிறையில், விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. சிறைத் தண்டனை பெற்ற பல கைதிகளுக்குச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறைப் பாதுகாப்பில் பல இடங்களில் பலவீனங்கள் உள்ளன. இதுதவிர, சிறையில் விதிமுறைகளை மீறி குற்றவாளிகளுக்கு செல்போன், கஞ்சா, சிகரெட், மதுபானம் ஆகியவை தடையின்றிக் கிடைத்துள்ளன. சிறையில் செல்போன் ஜாமர் செயல்படாமல் இருந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் சிறையில் பாதுகாப்புத் தொடர்பான எல்லாக் கட்டமைப்பும் பலவீனமாக உள்ளது. அதை, உடனே சரி செய்ய வேண்டும். சிறைத் துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனரா என்பதை ஊழல் தடுப்புப் பிரிவுதான் விசாரணை செய்ய வேண்டும்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையில் தனிப்பட்ட ஒரு கைதியின் பெயரைக் குறிப்பிடவில்லை எனவும், அது சசியின் பெயர் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், வினய்குமாரின் விசாரணை அறிக்கையை அறிந்த ரூபா, “சிறைத்துறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கித்தான் சசிகலா சிறப்பு வசதிகள் பெற்றுள்ளார். அதை ஊழல் தடுப்புப் பிரிவுதான் விசாரணை செய்ய வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சிறைத்துறை ரகசியத்தைத் தோண்டாமல் விடமாட்டார் ரூபா?