[ad_1]





’கரூர் மாவட்டத்தில், காலி வீட்டுமனை வைத்திருப்பவர்கள் அதை சுத்தமாக வைக்காமல் கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்தால், அபராதம் விதிக்கப்படும்’ என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் எச்சரித்துள்ளார்.





கரூர் நகராட்சியில் உள்ள காமராஜ் நகர்,செங்குந்தபுரம்,விவேகானந்தர் தெரு,பழனியப்பா நகர், புன்செய் புகளூர் பேரூராட்சி, அண்ணா நகர், ஆர்.எஸ் ரோடு, அரசு மருத்துவமனை, சந்தை, கால்நடை மருத்துவமனை, காவல் நிலைய வளாகங்கள் ஆகிய பகுதிகளில், மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ், டெங்கு தடுப்புப் பணிகள், சுற்றுப்புற சுகாதாரப் பணிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது பேசிய அவர், ’கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகள், சுற்றுப்புற சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள 4000-க்கு மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். கொசுப் புழுக்களை அழிக்கும் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று அவற்றை அழிக்கும் அபேட் மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர்களை வழங்கிவருகிறார்கள். துப்புறவுப் பணியாளர்கள், தெருக்கள், சாலையோரம் உள்ள தேவையில்லாத பொருள்களை அகற்றி, பிளீச்சிங் பவுடரை தெளித்துவருகிறார்கள்.


சாக்கடைகளை நாள்தோறும் சுத்தம்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தெருக்கள் மற்றும் வீடுகளில் கழிவுநீர் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்ளவும், நிலவேம்புக் குடிநீர் பருகவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையைக் கண்காணித்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலி வீட்டுமனை வைத்திருப்பவர்கள், அதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்தால், அபராதம் விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கை செய்தார்.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்