[ad_1]
’மதத் தீவிரவாதத்தை எதிர்த்துக் கருத்துக்கூறியுள்ள நடிகர் கமலின் உயிரை எடுக்கவேண்டும் என இந்து மகாசபைத் தலைவர் ஒருவர் கொக்கரித்திருக்கிறார்; இது பச்சையான மிரட்டல் வேலை’ என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமீபகாலமாக பல்வேறு பொதுப்பிரச்னைகள் பற்றி கருத்து தெரிவித்துவரும் கமல்ஹாசன்,'இந்து தீவிரவாதம்' பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். இஸ்லாம் மதத்தில் எப்படி மிகச் சிலரே தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்களோ, அப்படி இந்து மதத்திலும் ஒரு சிறு கூட்டமே இந்த வேலையில் இறங்கியுள்ளது. கமல்ஹாசனும் 'இந்து வலதுசாரியினர்' பற்றியும், அவர்கள் பலாத்காரத்தைக் கையில் எடுப்பது பற்றியுமே பேசியிருக்கிறார். ’முஸ்லிம் தீவிரவாதம்’ என்று பேசிவரும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தினர், ’இந்து தீவிரவாதம்’ எனும் சொல்லாடலுக்கு மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்று அவர்கள் உண்மையிலேயே நம்பினால், ’முஸ்லிம் தீவிரவாதம்’ எனப் பேசுவதை அவர்கள் கைவிடவேண்டும். பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் வாழும் நமது நாட்டில் மதங்கள் பற்றிய விவாதங்கள் நடக்கலாம். ஆனால் அதிலே பலாத்காரத்தைப் புகுத்தும்போது அது மதம் தொடர்பான தீவிரவாதமாக அல்லது பயங்கரவாதமாக மாறிப்போகிறது. இந்த வேலையைச் செய்வது சாதாரண மத நம்பிக்கையாளர்கள் அல்ல; மாறாக அரசியல் அதிகார நோக்குடைய ஒரு சிறுகூட்டமே. அந்த வெறியர்களைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது. காரணம், அவர்கள் தங்கள் செயல்களால் மக்கள் ஒற்றுமையை சிதைக்கிறார்கள். சிறுபான்மை மதங்களின் பெயரால் மட்டுமல்ல, பெரும்பான்மை மதமாகிய இந்து மதத்தின் பெயராலும் இங்கே தீவிரவாதச் செயல்கள் நடத்தப்படுகின்றன என்பது கண்கூடான உண்மை. பழைய வரலாறு ஒருபுறம் இருக்க, சுதந்திர இந்திய வரலாற்றிலேயே இதற்கு ஏகப்பட்ட ஆதாரங்கள் உண்டு. தேசப்பிதா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதிலிருந்து, பாபர் மசூதி இடிக்கப்பட்டதுவரை, 2002-ல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் முதல் இன்று மாட்டிறைச்சிக்காக நடத்தப்படும் படுகொலைகள் வரை அதற்கான ரத்த சாட்சியங்கள் அனேகம். கமல்ஹாசனின் கவலையை இந்தப் பின்புலத்தில் புரிந்துகொள்வதே, இனியும் தீவிரவாதங்கள் தொடராமலிருக்க என்ன வழி எனக் கண்டறிவதே நியாயம். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இப்படியாகத்தான் சிந்திக்கிறது, பிறரையும் சிந்திக்கவேண்டுகிறது. ஆனால் பா.ஜ.க. உட்பட்ட சங்பரிவாரத்தினரோ அவர் அனைத்து இந்துக்களையும் தீவிரவாதிகள் எனச் சொல்லிவிட்டதாக, பொய் வியாக்கியானம் தந்து அவர் மீது நாகரிகமற்ற விமர்சனங்களை வீசியிருக்கிறார்கள், அவர் மீது உ.பி.யில் வழக்குப் போட்டிருக்கிறார்கள். இந்து மகாசபை தலைவர் ஒருவர் அவரது உயிரை எடுக்கவேண்டும்என்று கொக்கரித்திருக்கிறார். இவை பச்சையான மிரட்டல் வேலைகள். இவற்றை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.
சாதாரண இந்துக்கள் வேறு, இந்துத்துவாவாதிகள் எனும் மதவெறிக்கூட்டம் வேறு. சாதாரண இந்துக்களின் பிரதிநிதிகள்அல்ல, இந்தக் கூட்டம். இந்து மதத்தின் பெயரால் இவர்கள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முயன்றால், சாதாரண இந்துக்களே இவர்களை எதிர்ப்பார்கள். மதவெறியர்களின் சதிச்செயல்களை முறியடித்து அனைத்து மனிதநேய சக்திகளையும் மக்கள் ஒற்றுமையைப் பேண முன்வரவேண்டும்” என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதத் தீவிரவாதத்தை எதிர்க்கும் கமலை மிரட்டுவதா?- மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்
TAGS :
COMMENTS