[ad_1]



தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்கள் துப்புரவுப் பணியாளர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை விதைத்துச் சென்றிருக்கிறது. விழா நாள்கள்மீது வெறுப்பும், அதன் தொடர்ச்சியாகக் கடுமையான மன உளைச்சலும், இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை அன்று நாம் வெடித்த வெடிகளின் குப்பைகளை டன் கணக்கில் அள்ளிய துப்புரவுப் பணியாளர்களின் மனநிலையை என்றைக்காவது நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா. இதேபோல், வரவிருக்கும் பொங்கல் பண்டிகையின்போது 'பழையன கழிவோம்', எனக் கூறி வீட்டில் உள்ள பழைய துணிகள், குப்பைகளை நிச்சயம் தீயிலிட்டு எரிப்போம். சாலைகளிலும், தெருக்களிலும் குவிந்து கிடக்கப்போகும் அவற்றை அள்ளி, அப்புறப்படுத்துவதற்கும் இதே துப்புரவுத் தொழிலாளர்கள்தான் வரப்போகிறார்கள். அதிகாலையில், அடர்த்தியான புகைக்கு மத்தியில், கருகிக் கிடக்கும் குப்பைகளை அள்ளப்போகும் இவர்களை நினைத்தால், இப்போதே நமக்கு சுவாசம் முட்டும். 


தமிழகம் முழுவதும் துப்புரவுப் பணியாளர்களின் நிலை இதுதான். மற்ற சாதாரண நாள்களிலாவது இவர்களின் நிலை இயல்பாக இருக்கிறதா என்றால், அதுவும் பரிதாப ரகம்தான். 2011 கணக்கெடுப்பின்படி, ஓசூர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 2,45,314 பேர். இந்நகராட்சியைத் தூய்மையாக வைத்திருக்கவும், நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கவும் 900 துப்புரவுப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், தற்போது பணியில் இருப்பவர்களோ 428 பேர்தான். இதில், 203 பேர் நிரந்தரப் பணியாளர்கள், 225 பேர் ஒப்பந்தப் பணியாளர்கள். ''இந்த வேலைக்கு எல்லாம் யாரு சார் வராங்க...'', என்று நம்மிடம் சொல்கிறார் ஓர் அதிகாரி.



சாலையோரக் குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்த மாதம்மா என்ற பணியாளரிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, "ஊரெல்லாம் சுத்தம் செய்யும் எங்களை யாரும் பெரிதாக மதிப்பதில்லை. அடிக்கடி உடல்நலக்குறைவு வந்துவிடுகிறது. அரசு மருத்துவமனைக்குப் போனால், பல நேரங்களில் எங்களைக் கீழ்த்தரமாக நடத்துகிறார்கள். நாங்கள் வாங்கும் சம்பளத்துக்கு அங்குதான் போகமுடியும். இதே மாதிரி சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு மூன்று மாதமாக அலைந்துகொண்டிருக்கிறேன். உதவி ஆட்சியர் வரைக்கும் கடிதம் எழுதிக் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் குழந்தைகளைப் பள்ளிகளில்கூட சேர்த்துக்கொள்வதில்லை" எனக் குமுறுகிறார்.

"நாய் செத்துக் கிடந்தாலும் சரி, மனிதன் செத்துக் கிடந்தாலும் சரி... அதை நாங்கதான் போய் அப்புறப்படுத்தணும். எந்த அதிகாரியும் எங்களை மரியாதையா நடத்தமாட்டேங்குறாங்க. அக்கம்பக்கத்துல இருக்கவங்களும், 'அவனே குப்ப அள்ளுறவன், அவங்கிட்ட என்ன பேச்சு'-னு கேவலமாப் பேசுறாங்க. அதுமட்டுமல்லாமல், ஆள் பற்றாக்குறை இருப்பதால், 3 பேர்  செய்யவேண்டிய வேலைகளை ஒருத்தரே செய்யுறோம். அதிகாலை 6 மணி முதல் காலை 11 மணி வரை வீட்டுத் தெருவில் உள்ள குப்பைகளை அள்ளுவோம். மதியம் 2 மணி முதல் சாயங்காலம் 5 மணி வரை மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குப் போய்டுவோம், இடைப்பட்ட மதிய நேரத்துல சாக்கடை சுத்தம் செய்யப் போவோம்" எனக் கூறியவாறே வண்டியை இயக்கத் தொடங்கினார் சந்திரன் என்ற பணியாளர்.



துப்புரவுப் பணிக்கு உள்ளூரில் ஆள் கிடைக்காமல், 80 கிலோ மீட்டர் தாண்டிச் சென்று கூட்டி வருகின்றனர். தினமும் பணி நிமித்தம் வந்துபோகும் பயணச் செலவுகளை அவர்களின் சம்பளத்திலிருந்தே பார்த்துக்கொள்ள வேண்டுமாம். வருடத்தில் ஒரு முறை மட்டும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஜெர்க்கின் மற்றும் ஷு வழங்குகின்றனர். மற்றபடி கையுறை, மாஸ்க் ஆகியவற்றையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இதுதான் துப்புரவுப் பணியாளர்களின் இன்றைய வாழ்நிலை. 


சாக்கடை மற்றும் குப்பைகளைச் சுத்தம் செய்ய நவீன எந்திரமும், நோய்வாய்ப்படும் ஊழியர்களுக்குத் தரமான இலவச மருத்துவமும், தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த அரசு. நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் துப்புரவுப் பணியாளர்கள்!

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");