[ad_1]



கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகத் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் முகிலனை விடுவிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கும் இயக்கத்தைப் பல்வேறு சமூகநல அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன. 


ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர், முகிலன். பொதுப்பணித்துறையில் பணியாற்றிய அவர், தமிழ் மீதும் தமிழர் மீதும் கொண்ட அக்கறை காரணமாக சமூகப் போராளியாக மாறினார். வாழ்வின் பெரும்பகுதியைப் போராட்டக் களத்தில் செலவிட்ட எளிய மக்களின் தோழனான முகிலன், நொய்யல் ஆறு மாசடைந்த விவகாரம், காவிரி மணல் கொள்ளை தடுப்பு, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், தாது மணல் கொள்ளை தடுப்பு, மீத்தேன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் நியூடிரினோ எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், கதிராமங்கலம் போராட்டம் என அவர் பங்கேற்ற போராட்டக்களம் நீண்ட நெடியதாக உள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் கொள்ளையைத் தடுக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் சொந்த ஊருக்குத் திரும்புகையில், கடந்த செப்டம்பர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட முகிலனை விடுவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.

முகிலன் விடுதலைக்கான ஆதரவு இயக்கம், நம்மாழ்வார் மன்றம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, அத்திக்கடவு அவிநாசி திட்டப் போராட்டக் குழு, தமிழ்நாடு பாதுகாப்பு இயக்கம் மாணவர் அமைப்பு, செரையாம்பாளையம் 100 வருட ஆலமரம் பாதுகாப்புப் போராட்டக் குழு, மக்கள் பாதை, புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு, நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சி எனப் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் மனு அளித்து வருகின்றனர். 



ஏற்கெனவே, ஈரோடு, கரூர், நெல்லை, கோவை  ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 3-ம் தேதி சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட உள்ளது. மாவட்டங்களில் அளிக்கப்பட்டது போலவே அந்த மனுவில், ’’கடந்த செப்டம்பர் 18-ம் தேதி முகிலனை இலங்கையில் வெள்ளை வேன் கடத்தல் போன்று வாகனத்தில் கடத்திச் கைது செய்த காவல்துறைமீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய அப்பாவி மக்கள்மீது போடப்பட்ட 132 வழக்குகளையும் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பல்வேறு குறைபாடுகளுடன் கட்டப்பட்ட கூடங்குளம் அணு உலைகளை மூடுவதுடன் கூடுதல் அணு உலைகளைக் கட்டும் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட முகிலனை விடுவிக்க வேண்டும். நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கப் போராடிவரும் முகிலனின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சிறையிலிருந்து முகிலனும் நெல்லை மாவட்டக் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிக்கு மனு அனுப்பி வைத்துள்ளார். அத்துடன், முகிலனுக்கு ஆதரவாக மேலும் பல்வேறு அமைப்புகளும் களமிறங்கிப் பல்வேறு மாவட்டங்களிலும் மனு அளிக்க திட்டமிட்டுள்ளன.