[ad_1]

பத்மாவதி படத்துக்கு அளித்துள்ள தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெறவேண்டும் என்று பிரிட்டிஸ் திரைப்படங்கள் தணிக்கை அமைப்புக்கு லண்டன் ராஜ்புத் சமாஜ் கோரிக்கைவிடுத்துள்ளது.




சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம், 'பத்மாவதி'. இந்தப் படத்தில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். வரலாற்றுப் பின்னணியைக்கொண்டு இந்தப் படம் மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திர சமூக மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

அதனால், டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவிருந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் படம் வெளியாவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரிட்டன் சென்சார் போர்டு ‘12-ஏ’ சான்றிதழுடன் பிரிட்டனில் வெளியாவதற்கு அனுமதி அளித்துள்ளது. அதாவது, படத்தில் மிதமான வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தங்கள் பெற்றோருடன் வந்து மட்டுமே பார்க்க வேண்டும். இதனால் எந்தவொரு காட்சியும் நீக்கப்படாமல், ‘பத்மாவதி’ திரைப்படம் பிரிட்டனில் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், லண்டன் ராஜ்புத் சமாஜ் சார்பில், பத்மாவதி படத்துக்கு அளிக்கப்பட்டுள்ள தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறவேண்டும் என்று பிரிட்டிஸ் திரைப்படங்கள் தணிக்கை அமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவித்துள்ளதாவது, 'பத்மாவதி படம் எங்களுடைய வரலாறு, கலாசாரம் மற்றும் பண்பாட்டைச் சிதைத்துள்ளது. இந்தப் படத்துக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளனர்.