[ad_1]
தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கைக்குப் பின் இலங்கை - இந்தியா கடற்படையின் கூட்டுச் சதி இருக்குமோ என்று ஐயம் ஏற்படுகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையால் கடந்த இரண்டு தினங்களில் 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் கைது நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 'ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனே விடுதலை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
சில நாள்களுக்கு முன்பு இந்தியக் கடலோர காவற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் தமிழக மீனவர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இப்போது இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தினந்தோறும் கைது செய்யப்படுகின்றனர். இது இந்திய இலங்கைக் கடற்படைகளின் கூட்டுச் சதியோ என்ற ஐயத்தை நமக்கு எழுப்புகிறது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைக் கடற்படையினர்தான் தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் தொடுத்து வந்தனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலோ இந்தியக் கடலோரக் காவற்படையே தமிழக மீனவர்களைத் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தியக் கடலோரக் காவற்படை தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் அந்தோணி பிச்சை, ஜான்சன் ஆகிய மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
கடலில் இருந்தபடியே அவர்கள் அந்தத் தகவலை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். அதனால் கோபமுற்ற கடலோரக் காவல்படையினர் அந்தக் காயமுற்ற மீனவர்களை சிறைபிடித்து இரும்புக் கம்பியால் தாக்கியும் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டும் 12 மணிநேரத்துக்கும் அதிகமாக சித்திரவதை செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடு பிரச்னையைப் பெரிதுப்படுத்தினால் உங்களையெல்லாம் இலங்கைக் கடற்படையினரிடம் சொல்லி கைது செய்ய வைப்போம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் நேற்று முன்தினம் பத்து மீனவர்களை இலங்கைக் கடற்படை கைதுசெய்தது. நேற்றிரவு மேலும் பத்துப்பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதன் பின்னே இந்திய இலங்கைக் கடற்படைகளின் கூட்டுச் சதி இருக்குமோ என்ற சந்தேகத்தை நமக்கு எழுப்புகிறது.
கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்கள் தமிழக மீனவர்கள் பிரச்னையிலும் அதே அளவு அக்கறை காட்ட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய-இலங்கைக் கடற்படைகளின் கூட்டுச் சதியா..? கேள்வி எழுப்பும் திருமாவளவன்
TAGS :
COMMENTS