[ad_1]





Kancheepuram: 

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் தவித்துவருகின்றனர். அவர்களை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். 


தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்குப் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் தவித்துவருகின்றனர். சென்னையில் ஓட்டேரி, சிந்தாதிரிப்பேட்டை, கொரட்டூர், திருவொற்றியூர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த மக்கள் பாதுப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு, ரொட்டிகள், பிஸ்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுவருகின்றன.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர், பள்ளிக்கரணை, மணிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் மழை நீரில் சூழ்ந்துள்ளன. வீட்டைவிட்டு வெளியே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இதனிடையே, மணிமங்கலத்தில் உள்ள பேச்சி பவுண்டேஷன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அவர்களின் வீட்டைச் சுற்றி மழை நீர் குளம்போல் தேங்கிக் கிடப்பதால் வீட்டை விட்டுவெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இதில் இரண்டு கர்ப்பிணிப் பெண்களும் அடங்கும்.




இதுகுறித்து சென்னை கட்டுப்பாட்டு அறையில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையர் சத்யகோபாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மாவட்ட வெள்ளப்பாதிப்புகள்குறித்து ஆய்வுசெய்யும் அதிகாரி அமுதாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு கர்ப்பிணிப் பெண்களை மீட்க ஆம்புலன்ஸ் அனுப்பிவைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. "இந்த பகுதியில் மழை நீர் அதிகமாக சூழ்ந்துள்ளது. இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் தவித்துவருகின்றனர். அவர்களை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும். நாங்கள் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகிறோம்" என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, மீட்புக்குழுவினர் பரிசலுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இரண்டு கர்ப்பிணி பெண்களையும் பரிசல் மூலம் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்