[ad_1]
துபாயில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு செல்ல வழியின்றி வறுமையில் தவித்த மாணவிக்கு அமைச்சர் மணிகண்டன் நிதி உதவி வழங்கினார்.
முதுகுளத்தூர் அருகே உள்ளது பொசுக்குடிபட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி சித்திரைசாமியின் மகள் காமாட்சி (22). இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக் கழகத்தில் முதுநிலை யோகா முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கீழக்கரையில் உள்ள கல்லூரில் ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தபோது, யோகாவில் ஆர்வம் ஏற்பட்டு அதனை முழுமையாக கற்க துவங்கினார். இதன்மூலம் விருஷாசஹாசனம், சர்வாங்ஹாசனம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான யோகசானங்களை கற்று தேர்ந்தார். அவர் பல்கலைக்கழக அளவில் நடந்த யோகா போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியுள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் தூத்துக்குடியில் நடந்த தேசிய யோகா போட்டிகளில் பங்கேற்று 2-ம் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து தாய்லாந்தில் நடந்த சர்வதேச யோகா போட்டியிலும், காஷ்மீரில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியிலும் வெள்ளி பதக்கஙகளை வென்றுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் துபாயில் சர்வதேச யோகா தரப்பட்டியல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களில் காமாட்சியும் ஒருவர். ஆனால் காமாட்சியின் குடும்பம் ஏழை விவசாய குடும்பம் என்பதால் துபாய் சென்று வருவதற்கு தேவையான பொருளாதாரம் காமாட்சி குடும்பத்தினரிடம் இல்லை. சர்வதேசப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும், அதற்கு தேவையான பொருளாதார வசதி இல்லாததால் காமாட்சி அந்த போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்து வந்தார். இது குறித்து நமது விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் மாணவி காமாட்சியின் வறுமை நிலையை அறிந்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.60 ஆயிரத்தை காமாட்சிக்கு வழங்கியதுடன், சர்வதேச யோகா போட்டியில் வென்றுவர வாழ்த்தும் கூறினார். மேலும் உதவிகள் தேவை எனில் தமிழக அரசு மூலம் செய்து தரப்படும் எனவும் உறுதியளித்தார். இதையடுத்து அமைச்சரின் உதவிக்கு நன்றி தெரிவித்த மாணவி காமாட்சி ’ஏழ்மை நிலையினால் துபாயில் நடக்க உள்ள சர்வதேச யோகா போட்டிக்கு செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் அமைச்சர் செய்த உதவியினால் நான் போட்டிக்கு செல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நாட்டுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் தங்கம் வென்று வருவேன் என்றார் நம்பிக்கையுடன். வாழ்த்துக்கள் காமாட்சி.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
சர்வதேச யோகா போட்டிக்கு செல்ல நிதி இன்றி தவித்த மாணவிக்கு உதவிய அமைச்சர்!
TAGS :
COMMENTS