[ad_1]

கோவை மாவட்டம், சோமனூர் அருகே அரசு பேருந்தில் உயர் சாதியினருக்கு இணையாக அமர்ந்தார் என்பதற்காக செகுடந்தாளி என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.



இதையடுத்து, செகுடந்தாளியில் உள்ள முருகேசன் நினைவிடத்தில் ஆண்டுதோறும் தலித் அமைப்புகள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். நேற்று வழக்கம்போல செகுடந்தாளியில் அஞ்சலி செலுத்திவிட்டு, தலித் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் திரும்பி வரும்போது சேடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தலித் அமைப்பினர் ரமேஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகின்றது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ்குமார் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சேடப்பாளையம் கிராமத்தில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும், ரமேஷ் குமாரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேடப்பாளையம் கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.



அஞ்சலி செலுத்த பல்வேறு தலித் அமைப்பினரும் வந்ததால், பிரச்னை ஏற்படும் சூழல் உருவானதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணப்பாளர் மூர்த்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், ரமேஷ் மீதான தாக்குதலைக் கண்டித்து, சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டியில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.