[ad_1]





'தமிழகத்தில், வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை' என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 





தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலை 15 நாள்களுக்குள் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையத்தின் சார்பில் கே.கே.ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஒன்றரை மாதத்துக்கு முன்பாகத் தொடரப்பட்ட இந்த வழக்கு, நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, 2011-ம் ஆண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணிகள் 2018-ம் ஆண்டு ஜனவரியில்தான் முடியும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தொகுதி மறுசீரமைப்புப் பணிகள்குறித்த அறிவிப்பை வெளியிட ஒருமாத கால அவகாசம் தேவை என்றும், எனவே, வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு சாத்தியமில்லை என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். 


தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது தாமதமாகவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பதவிக்காலம் ஆறு மாதமாக நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்