[ad_1]







முகநூல் பக்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக நீதிபதிக்கு, காவலர்கள் எழுதியுள்ள கடிதம் வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது ? 'நீதியரசர் கிருபாகரன் அய்யா அவர்களின் கனிவான பார்வைக்கு, அடிமையாக பணி செய்யும் காவலர்களின் கண்ணீர் மடல். சமீபகாலமாக பணியிலிருக்கும் காவலர்கள் பணிச்சுமையாலும், உயர் அதிகாரிகள் கொடுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. கடந்த 1 வருடத்தில் மட்டும் தோராயமாக 270 -க்கும் மேற்பட்ட காவலர்கள் இறந்துள்ளனர். பல காவலர் குடும்பங்கள் நாசமாய்ப் போனது. ஏழாவது ஊதியக்குழு பேச்சுவார்த்தைக்கு சங்க அங்கீகாரம் இல்லாத காவலர் சங்கம் சார்பாக யாரையும் அழைத்துப் பேசவில்லை. ஆதலால் தலைமைச் செயலாளா், உள்துறைச் செயலாளா் மற்றும் டி.ஜி.பி.க்கு  ஊதியக்குழு தொடா்பான கோரிக்கை மனுக்களை அனுப்பினோம். ஆனால் வழக்கம் போல் எங்கள் மனுக்கள் குப்பைத் தொட்டிக்குச் சென்றது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், காவல்துறை மானிய கோரிக்கையின்போது, தமிழகக் காவலர்களின் குடும்பத்தினா், முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காகக் கோட்டையை நோக்கிச் சென்றனா். ஆனால், காவல்துறை உயர் அதிகாரிகள் சாதுர்யமாக செயல்பட்டு அவர்களை கைது செய்து விட்டனர்.


கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி தமிழகக் காவலர்கள் முதல் ஆய்வாளா்கள் வரை தங்களது கோரிக்கைகளை முன் வைத்து ஒரு நாள் பணி செய்து கொண்டே மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் உண்ணாவிரதம் இருந்தனா். இதை கண்காணிக்கும் நடவடிக்கையில் மட்டுமே, அப்போது அதிகாரிகள் செயல்பட்டனா். அரசும் செவி சாய்க்கவில்லை. பல ஆண்டுகளாக தமிழகக் காவலர்களுக்கான சங்கம் இருந்தும், அங்கீகாரம் தராமல் வஞ்சித்து வருகின்றனா். காவலர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை அதிகாரிகள் செயல்படுத்தாத பட்சத்தில் அரசுக்கு நேரடியாக தெரிவிக்க சங்க அங்கீகாரம் வழங்க வேண்டும்.ஏழாவது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து, 10 ஆம் வகுப்பு தரத்தில் உள்ள மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மற்ற பலன்களை காவலர்களுக்கும் வழங்கவேண்டும். வரையறுக்கப்பட்ட பணி, வாராந்திர ஓய்வு, விடுமுறை தினங்களில் பணி செய்தால் இரட்டிப்பு ஊதியம், ஞாயிற்றுக் கிழமைகளில் பணியாற்றினால் மிகைப்படி ஊதியம் 200 ரூபாய் என்பதை முழு நாள் ஊதியமாக வழங்க வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப காவலர்களை நியமிக்க வேண்டும். சென்னையில் வழங்கப்படுவது போல் மற்ற மாவட்டங்களுக்கும் உணவுப்படி வழங்க அரசாணை இருந்தும் அதை செயல்படுத்தாமல் உள்ளனா். இதை சரிசெய்து மற்ற மாவட்டங்களுக்கும் உணவுப்படி வழங்க வேண்டும். பதவி உயர்வுகளை மற்ற துறையினருக்கு வழங்குவதுபோல் காவலர்களுக்கும் வழங்கவேண்டும்.


காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்தி அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். காப்பீட்டு திட்டத்தால் பல குடும்பங்கள் கடன் சுமையால் தவிக்கிறது. மருத்துவச் செலவு 20 ஆயிரம் ரூபாயைத் தாண்டினால் அதைக் காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும். (இன்சூரன்ஸ் பணம் கிடைக்காமல் இறந்த காவலர்கள் பலர் உள்ளனர்) தமிழகக் காவலர்கள் இந்தக் குறைகள் குறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் அரசு செவிச் சாய்க்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாலும் எங்களை விட்டு வைப்பதில்லை. போலீஸ் டி.ஜி.பி.யும், குறைதீர்ப்பு முகாம் என்ற பெயரில் மண்டலம் வாரியாக நடத்தி பொதுவான குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான மனுக்களைப் பெறக்கூடாது என கடுமையான உத்தரவு போட்டுள்ளார். எனவே, நீதியரசர் அய்யா அவர்கள் காவலர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மக்களுக்குச் சேவை செய்ய துறை வடிவிலான லஞ்சம் இல்லாக் காவல்துறையை உருவாக்க உதவுங்கள் அய்யா. தங்களின் தற்போதைய அதிரடித் தீர்ப்புகளைப் பார்த்த பிறகு தான் தங்களின் கனிவான பார்வையால் எங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கப் போகிறது என்ற நம்பிக்கை வந்துள்ளது. இப்படிக்கு விடியல் வரும் என்ற ஏக்கத்துடன் அடிமைக் காவலர்கள்' என்று அந்தக் கடிதம் முடிந்திருக்கிறது. காவலர் ஒற்றுமை, சங்கமம் என்கிற பத்துக்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகளில் இந்தக் குமுறல் வைரலாகப் பரவி வருகிறது. 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்