[ad_1]
பெரம்பலூரில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வருகை அரசு மருத்துவமனையில் அதிகரித்திருக்கிறது. ஆனால், மாவட்ட ஆட்சியர் பெரம்பலூரில் டெங்கு இல்லை என்று முன்னுக்குப் பின்னான தகவலைச் சொல்லியிருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் உடும்பியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. லாரி டிரைவரான இவர் கடந்த 20 நாள்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சாதாரண காய்ச்சல் என்று சொல்லி வீரமுத்துக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், காய்ச்சல் குறையவில்லை. தொடர் தலைவலி மற்றும் சிவந்த கண்விழியைப் பார்த்து குடும்பத்தினர் பயந்துபோய் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு இவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. வெள்ளை அணுக்கள் மிகவும் குறைந்திருந்ததால் இங்கு சிகிச்சைப் பெற முடியாது, திருச்சி அழைத்துச் செல்ல சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த வீரமுத்து நேற்றிரவு உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் நாகேந்திரன் கூறுகையில், "வேப்பந்தட்டை, எசனை, வாலிகண்டபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று காய்ச்சல் குணமடையாததால், அரசு மருத்துவமனைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். மாவட்டத்தில் பலபகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுநீரால் காய்ச்சல் பரவுகிறது என்று பலமுறை ஆட்சியரிடம் மனுகொடுத்தும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், தனியார் நிறுவனங்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் அந்த நிறுவனத்தின்மீது அபராதம் விதிக்கிறார்கள்.பேருந்து நிலையம் குப்பைக் கூளமாகக் காட்சியளிக்கிறது. அதைச் சரிசெய்ய ஆட்கள் வருவதில்லை. ஆனால், எந்த வீட்டில் தண்ணீர் தேங்கி இருக்கிறது என்று வீடுவீடாகச் சென்று பார்த்து, அவர்கள்மீது அபராதம் விதித்தால் என்ன நியாயம். இதுதான் ஆட்சியர் செய்யும் வேலையா. டெங்குவால் இறந்தால்கூட மர்மக் காய்ச்சலால் இறந்துவிட்டார் என்று சொல்லி விஷயத்தை மூடி மறைக்கிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் பலர் டெங்குவால் இறந்திருக்கிறார்கள். ஆனால், யாரும் டெங்குவால் உயிரிழக்கவில்லை என்று தகவல் அளிக்கிறார் ஆட்சியர். அரசுக்கு கெட்டப்பெயர் வந்துவிடும் என்பதற்காகப் பொய்க் கணக்கு சொல்கிறார்கள். பாதிக்கப்பட்ட நோயாளிக்களுக்குச் சரியாக மருத்துவம் பார்த்தால் நல்லது" என்று முடித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பெரம்பலூரில் அதிகரிக்கிறது டெங்கு உயிர்ப்பலி! - அச்சத்தில் மக்கள்
TAGS :
COMMENTS