[ad_1]





Tiruppur: 

திருப்பூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலைக்குச் சேர்ந்த ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.


திருப்பூர் மாவட்டம், இச்சிப்பட்டி ஊராட்சி பகுதியில் நேற்று புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடையில் பணிபுரிவதற்காக ஈரோடு மாவட்டம், முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தவசியப்பன் என்பவர் வேலைக்குச் சேர்ந்திருந்தார். முதல்நாள் டாஸ்மாக் கடையின் விற்பனை நேரம் முடிந்தபிறகு அந்த கடையில் பணியாற்றும் சக ஊழியர்கள் 2 பேருடன் சேர்ந்து தவசியப்பன் மது அருந்தியிருக்கிறார். அதன்பிறகு கடைக்கு உள்ளே சென்று தவசியப்பன் தூங்கிவிட, மற்ற இருவரும் கடையின் வெளிப் பகுதியில் படுத்து உறங்கியிருக்கிறார்கள். அதில் ஒருவரான ஆரோக்கியசாமி, காலை 6 மணிக்கு எழுந்து கடையின் கதவைத் தட்டி தவசியப்பனை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால், கடைக்கு உள்ளே உறங்கிக்கொண்டு இருந்த தவசியப்பனிடம் இருந்து எந்த பதிலும் வராததால், அங்கிருந்த மற்ற சில நபர்களின் உதவியுடன், கடையின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, அங்கு தவசியப்பன் இறந்துபோய் கிடந்துள்ளார்.


அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக மங்கலம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தவசியப்பனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தற்போது காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. வேலைக்குச் சேர்ந்த ஒரே நாளில் கணவர் மர்மமான முறையில் இறந்துபோனதைக் கண்டு தவசியப்பனின் மனைவி சுமதியும், அவரது உறவினர்களும் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்