[ad_1]







ஈரோடு மாவட்டம் சித்தோட்டிலிருந்து வந்திருந்த 6 விவசாயிகள் ஈரோடு கலெக்டரைச் சந்தித்து, ``விளைநிலத்தில் விஷக் கழிவுகளை இரவு நேரத்தில் கொட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். இதனால் பயிர்கள் கருகிப்போகிறது” என்று புகார் கொடுத்தார்கள்.


இதுபற்றி புகார் கொடுத்த சுப்பிரமணி, ``நாங்கள் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ராயப்பாளையம் கிராமத்திலிருந்து வந்திருக்கிறோம். சித்தோட்டில் உள்ள மிக்கி மிஸ் என்ற பால் குளிரூட்டும் நிறுவனத்தில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் விஷம் கலந்த அமில நீரை இரவு நேரத்தில் டேங்கர்கள் மூலமாகக் கொண்டு வந்து ராயப்பேட்டை ஓடையிலும் அருகில் உள்ள விவசாய நிலத்திலும் ஊற்றிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.

இந்த விஷக் கழிவுகள் ஊற்றப்பட்ட இடத்தில் புல் பூண்டுகூட கருகிவிடுகிறது. இந்த விஷக் கழிவுகளை விவசாயம் செய்யக்கூடிய காட்டிலும் ஊற்றிவிடுகிறார்கள். இதனால் காட்டில் பயிரிடப்பட்டிருக்கும், பயிர்களும் செடிகளும், தென்னைமரம், பனைமரம் போன்ற மரங்களும்கூட கருகி மடிந்துவிடுகிறது. இதனால், காட்டில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.



இந்த விஷக் கழிவுகள் கொட்டப்பட்ட சுமார் 20 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்ய முடிவதில்லை. அரசாங்கம் இதில் தலையிட்டு விஷக் கழிவுகள் இந்தப் பகுதியில் ஊற்றுவதைத் தடுத்து நிறுத்துவதோடு மிக்கி மிஸ் நிறுவனத்தின் மீது அபராதமும் விதிக்க வேண்டும்.
விவசாயம் அழிந்து வரும் நிலையில் இது போன்ற விஷக் கழிவுகளைக் கொட்டி விவசாயிகளை உயிரோட எரிப்பதுபோல இது போன்ற செயல்களைச் செய்யக்கூடியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்றார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்