[ad_1]





`மக்கள் வதைபட்டாலும் பரவாயில்லை கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பலம் விரிப்பதை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது மத்திய அரசு. மக்களுக்கு எதிரான கட்சி பி.ஜே.பி'  என்று கடுமையாக மத்திய அரசை தாக்கிப் பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர்.

                 


அவர் மேலும், `ஏழை, எளிய மாணவர்களைப் பாதிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முறையாக செய்யவில்லை. வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது முதல்வர் சேலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். இது கண்டிக்கத்தக்கது. வெள்ள நிவாரணப்  பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் சென்று பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்' என்றார்


காங்கிரஸ் கட்சி சிரிப்பு கிளப்பாக உள்ளது என்றும் மக்களிடத்திருந்து காங்கிரஸ் கட்சி விலகி உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, `காங்கிரஸ் கட்சி மக்கள் மனதில் எப்போதும் மகிழ்ச்சி ஏற்படுத்தும் கட்சியாகவே இருந்துள்ளது. ஆனால், பி.ஜே.பி. மக்களுக்கு துன்பங்களையும், அழுகையையும் உண்டாக்கும் கட்சியாக இருந்துவருகின்றது. காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்கள் பிரச்னைக்களுக்காகப் போராடி மக்களின் நெருக்கத்திலேயே உள்ளது. ஆனால், மோடி மக்களை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு பயணித்துவருகின்றார். கந்துவட்டியைவிட அதிக வட்டியை மத்திய அரசு ஜி.எஸ்.டி என்ற பெயரில் வசூலித்து வருகின்றது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை விலையேற்றம் செய்திருப்பது காங்கிரஸ் அல்ல. மத்தியில் இருக்கும் பி.ஜே.பி. அரசாங்கமும் தமிழகத்தின் பினாமி அரசாங்கமும் இணைந்துதான் இந்த விலையேற்றத்தை செய்திருக்கிறது. கரும்பின் விலை உயர்த்தப்படவேண்டும். கமல்ஹாசன் மிகச்சிறந்த ஹீரோவா, காமெடியனா என கேட்டீர்கள். கமல்ஹாசன் ஒரு நல்ல ஹீரோ. உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த நடிகர். அரசியலுக்கு கமல், ரஜினி, விஜய்,ஆகியோர் வருவதாக சொல்லிகொண்டு இருக்கிறார்கள். இந்திய அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். வரக்கூடியவர்களுக்கு வாழ்த்துகள். அவர்கள் கட்சி தொடங்கி கொள்கை, கூட்டணியை அறிவிக்கட்டும். பிறகு நான் கருத்துச் சொல்கிறேன்' என முடித்துக்கொண்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்