[ad_1]





நெல்லையில் நாய்கள் விரட்டியதால் பதறி ஓடித் திரிந்த புள்ளி மான் ஒன்று திறந்து கிடந்த ஏ.டி.எம் மையத்தில் நுழைந்து உயிர் தப்பியது. அதனை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.   
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் மான்கள் சரணாலயம் உள்ளது. அதன் சுற்றுச் சுவர்கள் சிதிலமடைந்து கிடப்பதால் அதில் இருந்து வெளியேறும் மான்கள் நான்குவழிச் சாலையைக் கடக்க முற்படும்போது வாகனத்தில் மோதி பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதனை மீறி சாலையைக் கடந்து காட்டு வழியாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து சுற்றித் திரிகின்றன. உணவுக்காக இப்படி சரணாலயத்தை விட்டு வெளியேறும் மான்களை அப்பகுதியில் உள்ள நாய்கள் வேட்டையாடுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணி அண்ணா மகளிர் கல்லூரிக்குள் நுழைந்த மானை, நாய்கள் கடித்துக் குதறிக் கொன்றன. அதனால் மான்களைப் பராமரிக்க வனத்துறையினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.  இந்த நிலையில், மான் ஒன்று பழையபேட்டை பகுதியில் இறை தேடி அலைந்துள்ளது. அதனைக் கண்ட அப்பகுதியில் உள்ள நாய்கள் ஒன்று சேர்ந்து விரட்டி உள்ளன. இதனால் உயிருக்குப் பயந்து காட்டுவழியாக ஓடி, ராணி அண்ணா கல்லூரிக்கு அருகில் சென்றுள்ளது. நாய்கள் வெகுஅருகில் வந்து விட்டதால் செய்வதறியாது தவித்த மான், அங்கிருந்த ஏ.டி.எம் மையத்தின் பாதி கதவு திறந்திருந்த நிலையில், அதன் உள்ளே சென்று விட்டது. 
உள்ளே நுழந்து அங்கும் இங்கும் ஓடியபோது கதவு மூடிக் கொண்டது. அதனால் நாய்கள் கண்ணாடிக்கு வெளியில் இருந்து குரைத்தபடியே இருந்துள்ளன. ஏ.டி.எம் உள்ளே சிக்கிக் கொண்ட மான் அதில் இருந்து வெளியே வர முயற்சித்து கண்ணாடியில் அங்கும் இங்குமாக முட்டியதில் அதன் முகப்பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து காயம்பட்ட மானை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்த பின்னர், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.    உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்