[ad_1]





Salem: மரவள்ளிக் கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரவள்ளிக் கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் மன உளைச்சலில் இருக்கிறார்கள். அரசு தலையிட்டு மரவள்ளிக் கிழங்குக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும். தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாவுகளில் ஸ்டார்ஸ் என்கின்ற ஜவ்வரிசி தயாரிக்க கூடாது என்கிறார்கள் விவசாயிகள்.





இதுபற்றி தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சுந்தரம், ''சமீப காலமாக மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசியில் ஆலை முதலாளிகள் மக்காச் சோள மாவை கலப்படம் செய்து ஜவ்வரிசி தயாரித்து வந்தார்கள். அதை மாவட்ட ஆட்சியரின் கவனத்தைக் கொண்டு வந்தோம். அதையடுத்து மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து மரவள்ளிக்கிழங்கு மாவோடு மக்காச்சோளத்தைக் கலப்பதை 50 சதவிகிதம் தடுத்து நிறுத்தினார்கள்.இதனால், விவசாயிகளாகிய நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தோம். மரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலை முதலாளிகள் தாய்லாந்திலிருந்து இறக்குமதியாகும் மரவள்ளிக்கிழங்கு வாங்கி அதில் மக்காச் சோள மாவை கலப்படம் செய்து ஜவ்வரிசித் தயாரிக்கிறார்கள்.தொடர்ந்து விவசாயிகளுக்குப் பல விதங்களில் இயற்கையும் வியாபாரிகளும் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கு மாவு ஜவ்வரிசி தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்படுவதில்லை. இந்த மாவு தோலோடு அரைக்கப்பட்டு மாசுகள் நிறைந்த கழிவு மாவு. இந்த மாவின் மூலம் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி உடலுக்கு ஆபத்தானதோடு உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கும். என்பதால் அரசு தாய்லாந்து மாவில் ஜவ்வரிசி தயாரிப்பதைத் தடுத்து நிறுத்துவதோடு தாய்லாந்து மாவில் ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலைகளை மீது சீல் வைக்க வேண்டும்'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்