[ad_1]
Ariyalur: ஒரு மழைக்கே சென்னை தத்தளிக்கிறது. ஏரி குளங்கள், முழுமையாகத் தூர்வாரியிருந்தால் ஏன் இந்த நிலை வரப்போகிறது என்று அ.தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் தா.ம.க தலைவர் ஜி.கே.வாசன்.
அரியலூரில் நடைபெற்ற கட்சி பிரமுகர் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வடகிழக்குப் பருவ மழை சென்னையில் அதிகளவு பெய்துள்ளது. இந்த மழையால் வடிகால் வசதியில்லாததாலும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தாலும் பொதுமக்களுக்குப் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளது. எனவே, தமிழக அரசு மற்ற துறையில் கவனம் செலுத்தாததால் மழைப் பாதிப்புகளைச் சீர் செய்ய வேண்டும். மக்களுக்குத் தங்கும் இடங்கள், உணவு வசதி செய்து தர வேண்டும். மேலும், ஏரி குளங்களைத் தூர்வாரவும் வரத்துவாய்க்கால்களைச் சீரமைக்கவும் ஆண்டுதோறும் பல கோடிகளை ஒதுக்கும் அரசு அது முறையாகச் செய்யப்பட்டுள்ளதா எனக் கண்காணிக்கவில்லை.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதக் காரணத்தாலேயே டெங்கு காய்ச்சலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த அரசு திணறிவருகிறது. இந்த மெத்தனப் போக்கால் பலபேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு மக்களைப் பற்றியெல்லாம் கவலையில்லை. இவர்களுக்கு ஆட்சி மட்டும்தான் குறிக்கோள். டெங்கு பாதிப்பால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் தர கோரிக்கை வைத்தோம். ஆனால், இதை அரசு கேட்கவில்லை எனக் குற்றம் சாட்டுகிறோம். சென்னையில் மழையின்போது மின்சாரம் தாக்கிய உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகை போதுமானது அல்ல. இதை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும். கந்துவட்டிக்கு வசூல் செய்பவருக்கு உச்சகட்ட தண்டனை தர வேண்டும். வடிகால், மழை நீர் சேகரிப்பு, உள் கட்டமைப்பு, ஆக்கிரமிப்புகள் இவற்றை அரசு கவனித்திருக்க வேண்டும்.
இதில் பொது மக்களும் பங்கு பெறவேண்டும். இவ்வகையான பாதிப்புக்கு பிளாஸ்டிக் முக்கிய காரணம் ஆகும். இதனை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். இதற்கு பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும். இதனை உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகளை மத்திய -மாநில அரசுகள் முறைப்படுத்த வேண்டும். தற்போது செய்து வரும் மழையால் டெல்டா பகுதிகளில் 60 ஆயிரம் ஏக்கர் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. எனவே பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு நிவாரணம் வேண்டும்'' என கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
'ஒரு மழைக்கே சென்னை தத்தளிக்கிறது'- அரசுக்கு எதிராகச் சீறும் ஜி.கே.வாசன்
TAGS :
COMMENTS