[ad_1]





பிரதமர் மோடியின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் அஜித் தோவாலின் மகன் நடத்தி வரும் அறக்கட்டளையில் இயக்குநர்களாக இருக்கும் அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளது.




பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் தோவால். இவரின் மகன் ஷவுர்யா தோவால் இந்தியா ஃபவுணடேஷன் என்ற பெயரில்  தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சுரேஷ் பிரபு, ஜெயந்த் சின்ஹா, எம்.ஜே.அக்பர் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர்.

''வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் அறக்கட்டளைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் எப்படி இயக்குநர்களாக இருக்கலாம்'' என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. செய்தி வெளியானதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  அமைச்சர்கள் நான்கு பேரையும் பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் சி.பி.ஐ. விசாரணை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கூறுகையில், 'இந்தியா ஃபவுண்டேஷன் நிறுவனம், FCRA சட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் உரிமம் (FCRA) வைத்திருக்கிறது. அறக்கட்டளையில் இயக்குநர்களாக உள்ள 4 அமைச்சர்களும் சட்டத்தை மீறியுள்ளனர். FCRA சட்டத்தின் பிரிவு 3- ன்படி, பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு நிதி பெறும் அறக்கட்டளைகளில் தொடர்பு கொண்டிருக்கக் கூடாது. இந்த நிறுவன இயக்குநர்களாக உள்ளவர்களில் 4 பேர் அமைச்சர்கள், ராம்மாதவ் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக  உள்ளார்.  சிறைத்தண்டனைக்குரிய குற்றம் செய்திருக்கின்றனர். இந்திய வரலாற்றில் எந்த அமைச்சர்களாவது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இயக்குநர்களாக இருந்துள்ளனரா? மோடி ஏன் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கிறார் '' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ''ஜெய்ஷா சக்ஸஸ் ஆனதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த வெளியீடு ஷவுர்யா '' என ட்விட் செய்துள்ளார்.


இந்தியா ஃபவுண்டேஷன் இயக்குநர் ஷவுர்யா தோவால், ''வெளிநாடுகளில் இருந்து எந்த நிதியும் பெறவில்லை. இந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆவதற்கு முன்னரே, அறக்கட்டளையில் இயக்குநர்களாக உள்ளனர் '' என்கிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்