[ad_1]





இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் கலெக்டர் கதாபாத்திரத்தில் நயன்தாரா, முக்கியமான ரோல்களில் வேல.ராமமூர்த்தி, பாண்டியன், ராமதாஸ், 'அது இது எது' பழனி பட்டாளம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த 'அறம்' படத்தின் டீசரும் ட்ரெய்லரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவந்த நிலையில், படமும் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் வெளியாகி முதல் நாள் இரவு காட்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  படத்தின் இயக்குநரோடு சேர்ந்து சத்யம் தியேட்டரில் பார்த்தார். 
படம் முடிந்து வெளிவந்த அவரிடம் படத்தை பற்றி கேட்டபோது, 'அனைவருக்கும் புத்தி சொல்லுகிற அருமையான திரைப்படம். இது அறம் உள்ளவர்களால் ஆய்வுசெய்யப்படுமானால், சர்வதேச அளவில் விருதுகள் பெறுகிற படம். சமூக அக்கறை, மனித நேயம், தன்னம்பிக்கை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சாட்டையடி கொடுக்கிறது. ராக்கெட் விட வேண்டும், இந்த நாட்டை வல்லரசாக்க வேண்டும் என்று துடிக்கிற ஆட்சியாளர்களுக்கு ஆழ்துளை கிணற்றில் விழுகிற குழந்தைகளைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. மனிதநேயம் உள்ள ஜனநாயக சக்திகள் அரசியல்வாதிகளாக இருந்தாலும் அதிகாரிகளாக இருந்தாலும் இந்தப் படத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறவர்கள் அரசியல்வாதிகளுக்கு அடிமைப்பட்டு இருக்க முடியாது என்பதை நயன்தாரா உணர்த்துகிறார். தான் மக்களுக்கு சேவை செய்ய கனவுகளோடு வந்தேன். ஆனால், அரசியல்வாதிகளின் கெடுபிடிக்குள் பணிசெய்யமுடியாத   நெருக்கடிகளை சந்தித்தேன், அடிமைக்கு அடிமையாக வேலை செய்ய விரும்பவில்லை என்று பதவியை உதறி எறிகிறார். இவ்வாறு நறுக்கு தெரித்தாற்போல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. சமூக அக்கறையை ஊட்டும் 'அறம்' மிகச்சிறந்த ஒரு படம். இயக்குநருக்கும் படத்தை துணிந்து தயாரித்த ராஜேஷ் அவர்களுக்கும் வாழ்த்துகள். குத்தாட்டம், சண்டை, காதல் காட்சிகள் என வணிக நோக்கில் எந்தக் காட்சியும் அமைக்கப்படாமல் அனைவரையும் கவரும் படம் 'அறம்' என்றார் விளக்கமாக.  படத்தை பார்க்க அழைப்புவிடுக்கப்பட்டதா? இல்லை நீங்களா எதார்த்தமாக வந்து பார்த்தீர்களா? 'இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. படத்தின் கதையை ஏற்கனவே கோபி நயினார் ஓரிரு வரிகள் சொல்லியிருக்கிறார். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் இருந்தே படம் எப்போது வெளியாகும் என்று ஆவலோடு எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்தேன். இன்றைக்கு திரைக்கு வருகிறது என்பதை தெரிந்து நானேதான் வந்து பார்த்தேன். ' சமூக பிரச்சனைகளை பற்றி படத்தில் பேசப்பட்டிருந்தால் அதற்கு எதிர்ப்பு விமர்சனங்கள் வருகிறதே...'அவ்வாறு விமர்சனம் பண்ணும் ஒவ்வொருத்தரும் வாயடைக்கும் வகையில் இந்தப் படம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் அறிவுரை சொல்லுமளவிற்கு நெளிவு சுழிவுடன் எல்லா காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. தங்களைப் பற்றி விமர்சிக்கிறார்கள் என்று அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நினைக்கலாம். ஆனால், அது நியாயமானது என்று சொல்லும் வகையில் அழுத்தமான காட்சிகள் அமைந்திருக்கின்றன'.
எப்பவும் சினிமாவை விரும்பி பார்ப்பீர்களா? இல்லை, இந்தப் படத்தின் கதைக்காகப் பார்த்தீர்களா?'எப்போதாவது நான் படம் பார்ப்பது உண்டு. 'அறம்' என்ற தலைப்பையும் இயக்குநர் கோபியையும் மிகவும் பிடிக்கும். அதற்காக, தியேட்டருக்கு வந்து படம் பார்த்தேன். ' என்று இயக்குநரைப் பாராட்டி கைகுலுக்கி விடைபெற்றார் திருமாவளவன்.    உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்