[ad_1]





ராமநாதபுரம் அருகே அரியமான் கடற்கரையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மற்றும் முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர். 




அரியமான் கடற்கரையில் நடந்த இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்ட ராமநாதபுரம் எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா செய்தியாளர்களிடம்  கூறுகையில், 'வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டு விடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடக்கையாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.இதற்கான இலவச தொலைபேசி எண் 1077. அதேபோல், 04567-230060 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பாதிப்பு விபரங்களை மக்கள் தெரிவிக்கலாம். ஊரணி,கண்மாய் உடைப்புகள்,வெள்ள பாதிப்புகள் ஆகியன குறித்து இந்த தொலைபேசி எண்ணில் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடியும்.வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படலாம் என 38 இடங்களை கண்டறிந்துள்ளோம்.இவற்றில் பாதிப்பு ஏற்பட்டால் அங்கு வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக பள்ளிகள்,கல்லூரிகள்,சமுதாயக்கூடங்கள்,புயல் காப்பகங்கள் என மொத்தம் 32 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் 74 பேரும்,தீயணைப்புத்துறையில் 60 பேரும் என மொத்தம் 134 பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கான சிறப்புப் பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ளனர்.இவர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு ராமநாதபுரம் பஜார், திருப்புல்லாணி, தொண்டி,மண்டபம் ஆகிய காவல் நிலையங்களில் தயாராக இருந்து வருகின்றனர்.இவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தகவல் வந்ததும் நேரில் சென்று தேவையான உதவிகளை செய்வார்கள்.எனவே மக்கள் வெள்ளப் பாதிப்புகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு விடுமோ என அச்சப்படத் தேவையில்லை.இந்த 4 குழுக்களுக்கும் தனித்தனியாக வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவோரை மீட்பதற்கான லைப் ஜாக்கெட்டுகள்,டார்ச்லைட்டுகள்,மண் வெட்டிகள்,அரிவாள் உள்ளிட்ட அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும்.


தேங்கும் நீரை வெளியேற்ற தேவையான பம்புசெட்டுகள்,உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அடைக்க ஏதுவாக தயார் நிலையில் 40 ஆயிரம் மணல் மூடைகள் ஆகியனவும் உள்ளன.ஜெனரேட்டர்கள்,ஜே.சி.பி. இயந்திரங்கள் ஆகியனவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜி.அசோக்குமார் தாஸ் நேரடி மேற்பார்வையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரகின்றன’ என்றார். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வில் ராமேஸ்வரம் டி.எஸ்.பி மகேஷ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம்,தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கேசவதாசன்,எஸ்.நாகராஜ் மற்றும் பல்வேறு காவல் நிலைய ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்