[ad_1]
சித்திரங்கள் சுகமான அனுபவங்களையும் கொடுக்கும்; சில சமயம், காத்திரமான கோபத்தையும் கொடுக்கும் என்பதற்கு சமீபத்தில் உதாரணமாகிப் போயுள்ளது ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா வரைந்த கார்ட்டூன். கந்துவட்டிக் கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பே தற்கொலை செய்துகொண்ட இசக்கிமுத்து குடும்பத்தின் மரணம் அனைவரையுமே உலுக்கியது. இதையொட்டி முதல்வர், நெல்லை ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா வரைந்த கார்ட்டூன், நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்குக் கடும் கோபத்தைக் கொடுக்க, பிறகென்ன அவர் அளித்த புகாரின் பேரில் கைதுசெய்யப்பட்டார் ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா.
அவரின் கைது, கருத்துரிமைக்காகக் களமிறங்கும் ஒட்டுமொத்த உணர்வாளர்களை உசுப்பிவிட, கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்யத் தொடங்கினர்.
‘‘சமூகவிரோதிபோல் சித்திரிப்பு!’’
டி.எஸ்.ஆர்.சுபாஷ், மாநிலத் தலைவர், டி.யூ.ஜே பத்திரிகையாளர் சங்கம்: ‘‘கந்துவட்டி கொடுமைக்கு எதிராகப் போலீஸிலும், மாவட்ட ஆட்சியரிடத்திலும் பலமுறை மனுகொடுத்தும் கண்டுகொள்ளாததால், வேறு வழி தெரியாமல், நம்பிக்கை இழந்து ஆட்சியாளர்கள் மீதும், அரசு அதிகாரிகளின் மீதும் காறித்துப்பும் விதமாகத்தான் 'தற்கொலை' செய்துகொண்டார்கள் இசக்கிமுத்து குடும்பத்தினர். இதையொட்டி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்த ஆட்சியாளர்களைக் கண்டித்து ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா ஒரு கார்ட்டூன் வரைந்தார். அதற்கு, 25 லட்சத்துக்கும் மேலான மக்கள் லைக் கொடுத்திருந்தனர். மேலும், அந்த கார்ட்டூன் பலரைச் சிந்திக்கவைத்தது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆட்சியாளர்கள், இன்று ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலாவைச் சமூகவிரோதியைப்போலச் சித்திரித்து கைதுசெய்துள்ளனர். கந்துவட்டியைத் தடுக்க இயலாத ஆட்சியாளர்கள், கருத்துரிமையைத் தடுக்கப் பார்க்கிறார்கள். பத்திரிகையாளர்களை முடக்குவதிலும், அவர்களின் குரல் வளையத்தை நெருக்குவதிலும் மத்திய அரசைப் பின்பற்றுகிறதா நம்முடைய மாநில அரசு என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. இது, பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தும் கருத்துரிமையை நசுக்கும் வேலையாகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்’’.
‘‘சர்வாதிகார நடவடிக்கை!’’
வசீகரன், மாநில ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி கட்சி, தமிழ்நாடு: ‘‘இந்திய அரசியல் சாசனத்தின் 19 (1) பிரிவு வழங்குகிற பேச்சு சுதந்திரத்துக்குள், அதன் நீட்சியான ஊடகச் சுதந்திரத்தின் வரையறைக்குள் கச்சிதமாகப் பொருந்திப் போகிற ஊடகச் செயல்பாட்டாளர் பாலா. மக்களின் கோபத்தைச் சொல்லும் கார்ட்டூனிஸ்ட் அரசாங்கத்தை ஜனநாயக வழிகளில் நெறிப்படுத்த உதவுகிறார். இந்த உண்மையைப் புரிந்துகொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும். ஊடகச் சுதந்திரம் அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் இந்தியச் சூழலில், பாலாவின் கைது ஊடகங்களை இன்னும் வேகமாகப் படுகுழிக்குள் தள்ளுகிற சர்வாதிகார நடவடிக்கை; இந்த அராஜகம் பிற ஊடகவியலாளர்களை அடிமைப்படுத்துகிற, அச்சுறுத்துகிற உள்நோக்கம் கொண்டது; மிகவும் தவறான முன்னுதாரணம் இது. ஊடகச் சுதந்திரத்தின் மீதான இந்த அப்பட்டமான தாக்குதலைத் தமிழக ஆம் ஆத்மி கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது’’.
‘‘அராஜக நடவடிக்கை!’’
முகைதீன் அப்துல் காதர், மாநிலச் செயலாளர், பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா: ‘‘ ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா சட்டவிரோத அடிப்படையில் இழுத்துச் சென்று கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், வள்ளியூரில் கூடங்குளம் மக்களுக்காகச் சட்டப் போராட்டங்களை நடத்திவரும் வழக்கறிஞர் செம்மணி சட்டவிரோத அடிப்படையில் வீட்டிலிருந்து குண்டுக்கட்டாக இழுத்துச்செல்லப்பட்டு ராதாபுரம் காவல் நிலையத்தில் சட்டவிரோதக் காவலில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு உள்ளார். மேலும், கடந்த செப்டம்பர் 18-ம் தேதி தோழர் முகிலன் தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் சீருடை அணியாத காவல் துறையினரால் இடைமறிக்கப்பட்டு குண்டுக்கட்டாக இழுத்துச் செல்லப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றம் செய்தவர்களாகவே இருந்தாலும், உரிய நீதிமன்ற ஆவணங்களைக் காண்பித்து சட்டவிதிகளுக்கு உட்பட்டுக் கைதுசெய்ய வேண்டிய பொறுப்பிலுள்ள காவல் துறையினர் சட்டத்துக்குப் புறம்பான வகையில் இதுபோன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா வன்மையாகக் கண்டிப்பதோடு சம்பந்தப்பட்ட காவல் துறையினர்மீது உரிய நடவடிக்கையை மேற்கொண்டு சட்டத்தின் நீதியை நிலைநாட்டி தங்கள் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மன்றத்தில் உறுதிப்படுத்துமாறு தமிழக அரசு மற்றும் காவல் துறையைக் கேட்டுக் கொள்கிறேன்’’.
‘‘இது, ஆரோக்கியமான போக்கு அல்ல!’’
ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: ‘‘தற்கொலை செய்துகொண்ட இசக்கிமுத்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் தனது பிரச்னையை முறையிட்டார் என்பதும், கந்துவட்டிக் கொடுமை தாங்க முடியாமலேயே தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதும் தெளிவானது. இப்பிரச்னை குறித்து கேலிச் சித்திரம் வரைந்த ஓவியர் பாலாமீது வழக்குப் பதிந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சமீப நாள்களில் கேலிச் சித்திரங்களுக்காகக் கைதுசெய்வது, இணையத்தில் மீம்ஸ் போடுவதற்காகக் கைதுசெய்வது என அடக்குமுறை நடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபடுத்தப்படுகிறது. இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது என்பதோடு தமிழகத்தின் ஜனநாயகச் சூழலைச் சிதைக்கும் நடவடிக்கையாகும். தமிழக அரசின் எதேச்சதிகாரப் போக்கை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
திருநெல்வேலியில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் தற்கொலைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இசக்கிமுத்து குடும்பத்தார் 4 முறை மனுக்கள் கொடுத்ததாகவும், அவை காவல் துறைக்கு அளிக்கப்பட்டதாகவும் ஒரு விளக்கத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையைப் பகிர்ந்து மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டிருக்கும் ஃபேஸ்புக் பதிவில், தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தாரையே குற்றவாளியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், தற்கொலைக்குப் பின்னணியாக நோக்கங்களைப் புனையும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். மனுகொடுத்தது 4 முறையா அல்லது 6 முறையா என்பதல்ல பிரச்னை. ஒரு குடும்பத்தார் அதீத வட்டியால் அல்லலுற்றுத் தவிக்கும்போது, சட்டப் பாதுகாப்பை அமலாக்கத் தடையாக இருந்தது எது என்பதுதான் பிரச்னை. மேலும், அதிகரிக்கும் கடன் மற்றும் வட்டிப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவேண்டிய அரசு நிர்வாகம், ஒரு பிரச்னையைத் தன்மீதான கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டிருப்பது இதிலிருந்து வெளிப்படுகிறது. இது, ஆரோக்கியமான போக்கு அல்ல.
பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்குவதையும், விமர்சனங்களை முடக்குவதையும் கைவிட்டு, தமிழகம் முழுவதும் மக்கள் எதிர்கொண்டுவரும் வட்டிப் பிரச்னைக்கு அதீத வட்டித் தடுப்புச் சட்டத்தை அமலாக்கித் தீர்வுகாண்பதுடன், நோய் நாடி நோய் முதல்நாடி என்ற வகையில் செயல்பட வேண்டும் எனத் தமிழக அரசை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது’’.
இறுதியாகக் ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா நீதிமன்றப் பிணையில் வெளிவந்துள்ளார். இருந்தாலும் கருத்துரிமை தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது என்றவகையில் அதற்கெதிராகத் தொடர் கருத்தரங்குகள் மற்றும் போராட்டங்களைப் பல்வேறு அமைப்புகளும் தொடர்கின்றன.
கந்துவட்டியைத் தடுக்க முடியாதவர்கள், கருத்துரிமையைத் தடுப்பதா?- கொதிக்கும் குரல்!
TAGS :
COMMENTS