[ad_1]



ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அந்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் பிரதமர் பதவியில் நீண்ட காலம் இருந்த பெருமை ஷின்சோவுக்குக் கிடைத்துள்ளது.


வடகொரியாவிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டிருந்த நிலையில், பிரதமர் ஷின்சோ அபே, கடந்த செப்டம்பர் மாதம் ஆட்சியைக் கலைக்க முடிவுசெய்தார். அவருடைய பதவிக் காலம் முடிய ஓராண்டு இருக்கும் நிலையில் அவர், நாடாளுமன்றத்தை கலைத்தார். இதைத்தொடர்ந்து, அக்டோபர் 22-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அபே தலைமையிலான ஜப்பான் ஆளும் கட்சி 465 இடங்களில் 312 இடங்களைப் பிடித்து வெற்றிபெற்றுள்ளது. இது, ஷின்சோ தலைமையிலான கட்சிக்கு கடந்த தேர்தலை விடவும் ஆறு இடங்களே குறைவாகும்.

வெற்றிக்கான காரணம்

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு புதிய கட்சிகள் உருவாகின. டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கி, "ரிஃபாமிஸ்ட் கன்சர்வேடிவ்" என்ற பெயரில் கட்சித் தொடங்கினார். அவருக்கு 18 சதவிகித மக்களின் ஆதரவு இருந்தது. முன்னாள் அமைச்சரான யூகியோ எடானோ, நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறுமையைப் போக்கும்வகையில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். இரண்டு புதிய கட்சிகள் தொடங்கப்பட்ட போதிலும், அந்தக் கட்சிகளுக்குத் தெளிவான கொள்கைகள் இல்லாத நிலையில், ஜப்பான் மக்கள் ஷின்சோவுக்கு அளித்து வந்த ஆதரவைக் குறைத்துக் கொள்ளவில்லை.

தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கொய்கி, "பன்னிரண்டு பூஜ்யம்" (Twelve Zeroes) என்ற திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்தார். அதில், "மின் நிலையத் திட்டங்கள், குழந்தைப் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் இல்லாத ரயில்கள் என அனைத்துக்கும் தீர்வு காணப்படும்" என்று கூறியிருந்தார். தொடக்கத்தில் புதிய கட்சிகளுக்கு ஜப்பான் மக்கள் ஆதரவு அளித்தாலும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அந்தக் கட்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இல்லை. இந்தச் சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது ஷின்சோ அபே-வின் அரசு.

மீண்டும் வெற்றி பெற்றார்

ஜப்பானின் மிகப் பிரபலமான நாளிதழ் ஒன்று நடத்திய சர்வேயில் ஷின்சோ வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவந்தது. அந்த சர்வே முடிவுகளின்படி, 34 சதவிகிதம் அபேவுக்கும், 13 சதவிகிதம் எடானோவுக்கும், 11 சதவிகிதம் யூரிகோ கொய்கிக்கும் வாய்ப்பு என தெரியவந்தது. ஷின்சோ அபேவுக்கான ஆதரவு அதிகமாக இருப்பதற்குக் காரணமாக, ஜப்பான் மக்களுக்கு வேறு வழியில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சர்வேயில் '51 சதவிகித மக்கள் அபேவுக்கு ஆதரவு அளிக்க விருப்பமில்லை' என்று தெரிவித்திருந்தனர். மேலும், ஜப்பானில் மக்கள் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், பெரும்பாலானோர் தேர்தலில் வாக்களிப்பதில்லை. வாக்களிப்பவர்களும் போட்டியிடுபவர்களின் கொள்கைகளைப் பார்த்து வாக்களிப்பதில்லை. "நன்றாக அறிமுகமான நபர், மாற்றி வாக்களிக்க வேறுயாரும் இல்லை" என்ற ஒரே காரணத்தால் அபேவுக்கு வாக்களித்து, அவர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்றே தெரிகிறது.

நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்

ஜப்பானில் நீண்டகாலம் பிரதமராக நீடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே. 2006-2007-ம் ஆண்டுதான் இவர், முதல்முறையாக பிரதமரானார். மீண்டும் 2012-2014, 2014-2017 ஆகிய ஆண்டுகளிலும் பிரதமர் பதவியை வகித்துள்ளார். தற்போது நடந்துமுடிந்த தேர்தலிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார். வலுவான எதிர்க்கட்சியோ, பலமான போட்டியாளரோ இல்லாமல் போனதே ஷின்சோவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று, பதவியேற்ற பின்னர், முதலில் சந்தித்தது ஷின்சோ அபேவைத்தான். அவர்கள் இருவருக்கு இடையேயும் நல்ல நட்பு இருந்து வருகிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்குப் பொதுவான எதிரியாக தற்போது திகழ்வது வடகொரியாதான். எனவே, இந்த இரு நாடுகளும் இணைந்து வடகொரியாவை வீழ்த்த திட்டம் தீட்டி வருகின்றன. 


ஜப்பான் நாட்டு மக்கள் ஒரே நபரைத் தொடர்ந்து பிரதமராகத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாத மற்ற நாட்டினருக்கும் இதுதான் ஒரே வழி. இந்தநிலை மாற வேண்டும் என்றால், அரசியலில் மாற்றம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் புதிய கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் ஈடுபட வேண்டும்.