[ad_1]



சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தைக் கைப்பற்றியது போலவே, அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இருந்த ஜெயா டி.வி-யையும், கழக நாளேடாகத் திகழ்ந்த நமது எம்.ஜி.ஆர். நாளிதழையும் கைப்பற்றுவதற்காகத்தான், அண்மையில் வருமான வரித்துறை சோதனை நடந்தேறியிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர். 


அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக ஜெயா தொலைக்காட்சி விளங்கி வந்தது. அ.தி.மு.க. கட்சி அறிவிப்பு முதல் ஆர்ப்பாட்ட அறிவிப்புவரை அனைத்துச் செய்திகளையும், அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஜெயா தொலைக்காட்சி மூலமே பார்த்துப் பழக்கப்பட்டனர். ஜெயா டி.வி.-யைப் பொறுத்தவரை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டாலும் அதன் நிர்வாகம் மற்றும் பொறுப்புகள் அனைத்தும் சசிகலா குடும்ப உறவுகளிடமே ஆரம்பம் முதல் இருந்துவந்நது. அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைசெய்யும் ஊழியர்கள் தேர்வு முதல் அவர்களுக்கான சம்பளம்வரை, அனைத்தும் சசிகலா குடும்ப உறவுகளாலேயே முடிவு செய்யபட்டது. அதேபோல் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழாகக் கருதப்படும் "நமது எம்.ஜி.ஆர்" நாளேடும் ஜெயலலிதாவினால் ஆரம்பிக்கப்பட்டாலும், அதன் நிர்வாக உரிமையை சசிகலா குடும்பத்தினரே வைத்திருந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் ஜெயா டி.வி-யும், நமது எம்.ஜி.ஆர் நாளிதழும் தொடர்ந்து சசிகலா குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சசிகலா குடும்பத்துக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும்  இடையே மோதல்போக்கு ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து சில தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். அந்தத் தீர்மானங்களில் "கட்சிக்குச் சொந்தமான ஜெயா டி.வி-யையும், நமது எம்.ஜி.ஆர் நாளிதழையும், சசிகலா குடும்பத்திடமிருந்து மீட்போம்" என்ற தீர்மானமும் இடம்பெற்றது. 

எடப்பாடி, ஓ.பி.எஸ். அணிகள் இணைப்புக்குப் பின், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருதரப்பும் இணைந்து நிறைவேற்றிய இந்தத் தீர்மானம், சசிகலா குடும்பத்தினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயா டி.வி-யின் சி.இ.ஓ.-வாக இருக்கும் விவேக், உடனடியாக இதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "அ.தி.மு.க என்ற கட்சிக்கும், ஜெயா தொலைக்காட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஜெயா தொலைக்காட்சி என்பது தனியார் நிறுவனம். நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையும் தனியார் நிறுவனமாகவே கருதப்படும்" என்று விரிவான விளக்கத்தை அவர் கூறியிருந்தார். 

அதன்பிறகு ஜெயா தொலைக்காட்சியில் தமிழக அரசுக்கு எதிரான செய்திகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தன. அதேபோல், மத்திய அரசுக்கு எதிராகவும் செய்திகள் வெளியாகத் தொடங்கின. ஜெயா தொலைக்காட்சி, சசிகலா குடும்பத்தினரின் நி்ர்வாகத்தில் செயல்பட்டாலும், அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் இன்னமும் அந்தத் தொலைக்காட்சியையே கட்சியின் அதிகாரபூர்வ டி.வி.-யாகப் பார்த்து வருகின்றனர். ஆனால், ஜெயா தொலைக்காட்சியில் தினகரன் தொடர்பான செய்திகள் மட்டுமே இடம்பெறுவதால், எடப்பாடி தரப்புக்கு இது பெருத்த சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஜெயா தொலைக்காட்சியைக் கைப்பற்ற வேண்டும் அல்லது முடக்க வேண்டும் என்ற முடிவுக்கு எடப்பாடி அரசு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த விவகாரங்களை மத்திய அரசிடம் நாசூக்காக தமிழக அரசு எடுத்துக் கூறியதாம். அதன் பிறகே ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்திலும் ரெய்டு நடத்தும் முடிவுக்கு வருமான வரித்துறை வந்ததாகச் சொல்கிறார்கள். ஜெயா தொலைக்காட்சியில் பெண் அதிகாரி ஒருவர் தலைமையிலான வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சென்று சோதனை நடத்தியது. அவர்கள் அந்த நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகள், சம்பள விவரங்கள் போன்றவற்றை தீவிரமாக ஆராய்ந்துள்ளார்கள். மேலும் 'தொலைக்காட்சி நடத்துவதற்கான வருவாய் எந்த வகையில் வருகிறது' என்றும் துருவியுள்ளார்கள். விசாரணையி்ல் ஈடுபட்ட அந்தப் பெண் அதிகாரி, ஜெயா தொலைக்காட்சி ஊழியர்களின் சம்பள விவரங்களையும் கேட்டறிந்தாராம். அப்போது, “இவ்வளவு கோடி சொத்து வைத்துக்கொண்டு ஊழியர்களுக்கு இவ்வளவு குறைவான ஊதியம்தான் தருகிறார்களா” என்று ஆச்சர்யத்தோடு கேட்டுள்ளார். மேலும் ஜெயா டி.வி-யின். ஒளிபரப்பு சம்பந்தமான சில ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றுள்ளார்கள். ஜெயா தொலைக்காட்சியின் அக்கவுன்ட்ஸ்  பிரிவில் இருந்தும் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுள்ளார்கள்.



அதேபோல் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் மூன்று நாள்கள் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். அந்த அலுவலகத்தின் மேலாளர் பாலாஜி, அக்கவுன்ட்ஸ் மேனேஜர் செல்வராஜ், ரகுபதி ஆகிய மூன்று பேரிடம் மட்டுமே, வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நமது எம்.ஜி.ஆர். அலுவலகத்தின் அக்கவுன்ட்ஸ் பிரிவு அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் விவேக், நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஸ் சினிமா மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களும் இந்த ரெய்டில் சிக்கின. இதனால் வேளச்சேரியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மாலில், விவேக் நடத்திவரும் தியேட்டர்கள் சுமார் ஐந்து நாள்கள் மூடப்பட்டிருந்தன. அங்கிருந்தும் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுள்ளார்கள். இந்த சினிமா நிறுவனங்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யபட்டதாக எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதுபற்றி அதிகாரிகள் சோதனையின்போது துருவியுள்ளார்கள்.


'ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர். ஆகிய இரண்டு அலுவலகங்களை வருமான வரித்துறையினர் குறிவைத்து ரெய்டு நடத்தியதே அவற்றை முடக்குவதற்கான வேலைகள்தான்' என்கிறார்கள். ஜெயா தொலைக்காட்சியின் ஆவணங்களை வைத்து தொடர்ந்து விவேக்கிற்கு குடைச்சல் கொடுத்து, அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாகத்தில் இருந்து அவரை விடுவித்து அந்தத் தொலைக்காட்சியை தற்காலிகமாக முடக்கும் திட்டத்தில் மத்திய அரசு இருப்பதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே, ஜெயலலிதாவினால் ஆரம்பிக்கபட்ட ஜெ.ஜெ. தொலைக்காட்சி முடக்கப்பட்டு, சில ஆண்டுகள் கழித்தே ஜெயா தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி உருவாக்கபட்டது. 'அதே நிலை இப்போது ஜெயா தொலைக்காட்சிக்கு ஏற்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அந்தத் திட்டத்தோடுதான் வருமான வரித்துறையினரின் தற்போதைய ரெய்டும் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");