[ad_1]
மழைவெள்ளம் மூடிக் கொண்டிருந்தது மின்சாரம் கசிகிற ஒரு கேபிள் வயர்தான், அது கறுப்பு நிறக் கல் அல்ல என்பதை உணர்வதற்குள், இரண்டு உயிர்கள் பறிக்கப் பட்டிருக்கிறது. மரணத்துக்கு காரணம், தரைக்கு மேலே நீட்டிக் கொண்டிருந்த மின்சாரக் கேபிள். கேபிள்களில் மின்சாரம் கசியாத வரையில், அப்படிக் கசிந்தாலும் அதில் கால்கள் படாத வரையில், சென்னை மக்கள் உயிரோடு இருக்கலாம். இரண்டுநாள் மழை, இதனோடு சேர்ந்து கொண்டால், மரணம் அருகில் வருவது நிச்சயம். வீதியில் விளையாடிய சிறுமிகள் இருவர், இப்படித்தான் மின்சாரம் பாய்ந்து, இறந்துள்ளனர். சென்னை கொடுங்கையூர், ஆர்.ஆர். நகரில்தான் இந்தப் பரிதாபச் சம்பவம் நடந்திருக்கிறது.கனமழை காரணமாக, சென்னைப் பள்ளிகளுக்கு நவம்பர் 1-ம் தேதி காலை, விடுமுறை என்ற தகவல் வெளியாகவே, ஒரே தெருவில் வசித்த பாவனாவும், யுவஸ்ரீயும் விளையாட்டுக் கனவுகளோடு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர்.
வீட்டிலிருந்து அவர்கள் வெளியில் வந்து ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. இருவர் மீதும் கேபிளில் கசிந்த மின்சாரம் பாய்ந்து, கீழே சுருண்டு விட்டனர் என்ற தகவல் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தோழிகளான அவர்கள் இருவருமே ஐந்தாம் வகுப்பு மாணவிகள். இந்தக் கொடூர மரணத்துக்கு நீதிகேட்டு, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தோழர்களும் பொதுமக்களும் சாலை மறியலில் இறங்க, அங்கே பெரும் போலீஸ் படை குவிக்கப்பட்டது. தோழர்கள் செல்வம், ரகு, டி.ஒய்.எஃப்.ஐ. நிர்வாகிகள் நித்யராஜ், டேவிட் ஆகியோர், "இந்தப் பகுதியில் உயர்மின் அழுத்தம் இருப்பதைச் சுட்டிக் காட்டி அதை சரிசெய்ய பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தோம். போராட்டம் நடத்தினோம். ஆனால், யாரும் அதை பொருட் படுத்தவில்லை. மின்கசிவு உள்ளதாக தகவல் கொடுத்தால், அங்கே புது கேபிள்களைப் போடாமல், ஏற்கெனவே இருக்கிற பழைய கேபிளில்,' ஒட்டு வேலை பார்த்துக் கொடுத்து விட்டுப் போய் விடுகிறார்கள். அந்த டேப்கள் இரண்டு நாட்கள் கூட தாங்காது. கேபிளை மாற்றிப் போடுங்கள் என்று சொன்னால், 'கேபிள் ஸ்டாக் இல்லை' என்பார்கள். இந்தப் பகுதியில் மின்சார இணைப்பு பாக்ஸ்கள், எப்போதும் திறந்த நிலையில் ஓப்பனாகத்தான் இருக்கும். பாக்ஸிற்குள் போகும் கேபிள் வயர்கள், தரையோடு, தரையாகத்தான் போகும். மழைக்காலத்தில் மரணம் இங்கு இலவசம். இந்த அநியாய மரணத்துக்கு ஒட்டுமொத்த அரசே காரணம்." என்றனர்.
ஆர்.ஆர். நகர் பகுதி பொதுமக்கள், “எங்களுக்குத் தகவல் கிடைத்து நாங்கள் ஓடும்போதே, மின்சார வாரியத்துக்கு நிறைய போன் செய்தோம், யாரும் வரவில்லை. கடைசியில், குழந்தைகளை காப்பாற்ற, நாங்களேதான் கட்டைகளை எடுத்துக் கொண்டு ஓடினோம். ஆம்புலன்ஸைக் கூப்பிட்டுப் பார்த்தோம். அது கூட அவசரத்துக்கு வரவில்லை. எல்லாம் முடிந்த பிறகுதான் மின்சாரத்தை துண்டித்தார்கள்." என்றனர். மற்றொரு பெண் “அரசு மற்றும் மின்வாரியத்தின் அலட்சியத்தினால் இரண்டு உயிர்களை பலிகொடுத்து நிற்கிறோம். இனி எங்கள் குழந்தைகளை இந்த வீதிகளில் எப்படி விளையாட விடுவது” என்றவர், தொடர்ந்து பேசமுடியாமல் தொண்டை அடைத்து பேச்சை நிறுத்தினார். தற்போது, வியாசர்பாடி பகுதியின் மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர், கடைநிலை ஊழியர்கள் ஐவர் என எட்டுபேர், பணியில் கவனக் குறைவு காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை மந்திரி தங்கமணி, "கொடுங்கையூர் பகுதியில் மின்கசிவு தடுக்க ஐந்து பேரைக் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், பொதுமக்கள் என்னை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பணியில் கவனக் குறைவாக இருந்தது மின்வாரிய அதிகாரிகள்தான். கேபிள் வயர், மழை நீரில் மூழ்கியதால் மின்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவில்லை. கேபிள் பழுது காரணத்தால்தான் உயரத்தில் செல்லும் வகையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது." என்றார். முதல்வரின் பொதுநிவாரண நிதி, மின்வாரிய நிதி என்று இறந்தக் குழந்தைகளின் குடும்பத்துக்கு அரசு நிதி அறிவித்துள்ளது.
இப்போது மீண்டும் அந்தப் பகுதியில் மின்சாரம் கசிவதாக பொதுமக்கள் புகார்களை அனுப்பியுள்ளனர். குழந்தை பாவனா என்கிற தேஜாஶ்ரீயின் பெற்றோர் அனு- பார்த்திபன். குழந்தை யுவஶ்ரீயின் பெற்றோர் மூர்த்தி- மோகனா. இரண்டு குடும்பத்திலும் கணவர்கள் தினக்கூலி தொழிலாளிகள். "லண்டன், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வெள்ளத்தை வெளியேற்றும் பணியில், இந்த அரசு சாதனை படைத்திருக்கிறது" என்கிறார் ஒரு மந்திரி. இன்னொரு மந்திரியோ, பழுதான கேபிள்களை புதிதாக மாற்றுவது குறித்துப் பேசாமல், "கேபிள்கள் பழுது என்பதால்தான், உயரத்தில் செல்லும் வகையில் மின் இணைப்பு வழங்கப் பட்டது" என்கிறார். "கடந்த 2015-ம் ஆண்டில் இருந்தது போல இப்போது சென்னையில் வெள்ள நீர் நிற்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள், சொல்லுங்கள் பார்க்கலாம்" என்கிறார், அடுத்த மந்திரி.
கடமையை செய்தாலும், இயற்கை விமர்சிக்கப் படுகிறது, செய்யாமல் விட்டாலும், 'தாகம், தாகம்' என்று மனித மனங்கள், இயற்கையை சபிக்கிறது. இரண்டாண்டுக்கு ஒருமுறையாவது பாடம் கற்றுக் கொடுக்கும் முடிவில் ஆகாயம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகள் ஆனாலும் கற்றுக் கொண்டே இருக்கும் முடிவில் அரசியல் வாதிகள் இருக்கிறார்கள். போருக்குத் தயாராவது போல் மக்கள், பதைபதைத்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விளையப்போகும் விபரீதம் தெரியும்... 'இந்த ஆயுதங்களுடன் போராடுங்கள்' என்று மக்களால் கொடுக்கப் பட்ட அதிகாரத்தை கையில் வைத்திருந்தாலும், மெள்ளமாகவே போர்க் களத்தை அடைகிறார்கள், அரசியல்வாதிகள்.இனி என்ன சொல்ல... குழந்தைகளின் உடல்கள் கிடத்தப் பட்டிருந்த ஆர்.ஆர். தெருவில் நிற்கும் ஒவ்வொரு நொடியும், மனதில் மின்சாரம் பாய்வது போலிருக்கவே, நிற்க தெம்பில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். இப்போது மந்திரிகளின் அறிக்கை, பேட்டிகளைப் பார்க்கும் போது மூச்சு விடக் கூட தெம்பில்லை...
“அதிகாரிகளே... கொடுங்கையூர் வீதிகளில் எங்கள் பிள்ளைகள் விளையாட வேண்டும்?!” - மக்கள் உத்தரவு
TAGS :
COMMENTS