[ad_1]
பாக்கெட் பாலில் தயாரிப்பு தேதி, முடிவு தேதி அச்சிடப்பட்டு விற்பனை செய்யக்கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் விற்கப்படும் பாக்கெட் பால்களில், அந்தப் பால் தயாரிக்கப்பட்ட தேதி இல்லாமல் முடிவு தேதி மட்டும் அச்சிடப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டேன் டீ கடையில், வாங்கிய இரண்டு பால் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி இல்லாமல், முடிவு தேதியை மட்டும் அச்சிட்டு விற்பனை செய்துள்ளனர்.
அதில் அமிர்தா என்ற நிறுவனம் நாளை மறுநாள் 8-ம் தேதியும், அரோமா பால் நிறுவனம் நாளை 7-ம் தேதியும் முடிவுத் தேதியாக அச்சிட்டு விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பாபு கூறுகையில், "விவசாயிகள் அவர்களது பசு மாட்டின் தரத்தை அவர்களே கண்டறியும் வசதிகளை ஏற்படுத்தி தந்தால்தான் நேரடியாக விற்பனை செய்ய முடியும். மேலும், பால் கெடாமல் இருக்க விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட பாலில் தயாரிப்பு தேதி மற்றும் முடிவு தேதி குறிப்பிடவேண்டும். தற்போது விற்பனை செய்யப்படும் பாக்கெட் பால்களில், முடிவு தேதி மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. பாக்கெட் பால் 24 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்.பாலில் பலவிதமான கலப்படம் இருப்பதாக வருகின்ற தகவலின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலை, பதப்படுத்துதல் மற்றும் தரநிர்ணயம் செய்து விற்பனை செய்ய விவசாயிகளால் முடிவதில்லை. எனவே உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில், வியாபாரிகள் நேரடியாக பாலை விவசாயிகளிடம் வாங்க மறுக்கின்றனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தக்க நடவடிக்கை வேண்டும்" என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தயாரிப்பு தேதி இல்லாமல் அச்சிடப்படும் பாக்கெட் பால்கள்: மாவட்ட ஆட்சியரிடம் புகார்
TAGS :
COMMENTS