[ad_1]

அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர், இந்திய போலீஸ்காரர்களின் குழந்தைகள் படிப்புக்கு உதவும் வகையில், ஆறு கோடி ரூபாய் செலவில் அறக்கட்டளை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை தொடங்க, நெகிழ்ச்சியான ஒரு பின்னணி உள்ளது. அது என்ன?




1970-ம் ஆண்டுவாக்கில் ராஜஸ்தானின் துங்கார்பூர் மாவட்ட எஸ்.பி-யாக இருந்த தரம்பால் குப்தாவின் மகன் பிரதீப். பள்ளிப் படிப்பை முடித்த பிரதீப்புக்கு அமெரிக்காவில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க ஆசை. மாவட்ட எஸ்.பி-யாக இருந்த தரம்பால் குப்தாவால் மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத நிலை. எனினும், மகனின் ஆசையை நிறைவேற்ற முடிவுசெய்தார். துங்கார்பூர் அரசக் குடும்பத்திடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி, மகனை அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்பினார். 1973-ம் ஆண்டு அமெரிக்கா சென்ற பிரதீப், அமெரிக்காவிலேயே வாழத் தொடங்கினார். பின்னாளில், ராஜஸ்தான் மாநில போலீஸ் துறைத்தலைவராக உயர்ந்த தரம்பால், 1984-ம் ஆண்டு ஓய்வுபெற்றார். பிறகு அவர் டெல்லியில் வசித்தார். 

தன்னைப் படிக்கவைக்க தந்தை பட்ட கஷ்டமெல்லாம் பிரதீப்புக்குத் தெரியாது. லிண்டா ஹெயின்ஸ் என்கிற அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து, ஹூஸ்டன் நகரில் செட்டிலாகிவிட்டார். தந்தை தரம்பால் ஒருநாள் இறந்துபோனார். இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு தந்தையின் பெட்டிகளை ஒவ்வொன்றாக பிரதீப் திறந்து பார்த்தார். வங்கி பாஸ்புக் ஒன்று கிடைத்துள்ளது. ராஜஸ்தான் மாநில போலீஸ் துறைத் தலைவராக இருந்த அவரின் வங்கிக்கணக்கில் 26 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. 

பெட்டியிலிருந்து கிடைத்த மற்றொரு ரசிது அவரை அதிரவைத்தது.  பிரதீப் அமெரிக்கா சென்று படிப்பதற்காக துங்கார்பூர் அரசக் குடும்பத்திடம் ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கியதும், அதைத் திருப்பிச் செலுத்தியதற்குமான ரசீது அது. பிரதீப் நிலைகுலைந்துபோனார். மாவட்ட எஸ்.பி-யாக இருந்த தன் தந்தையே தன்னைப் படிக்கவைக்க கடன் வாங்கியிருக்கும் விஷயம் அவரை என்னவோ செய்தது.



Photo Courtesy : Hindustan Times

`போலீஸ் துறையில் பெரிய பதவியில் உள்ள  தன் தந்தையே மகனின் விருப்பத்தை நிறைவேற்ற இவ்வளவு கஷ்டப்படவேண்டியுள்ளதே... சாதாரண கான்ஸ்டபிள்களின் நிலை..?' என்கிற கேள்வி அவர் மனதுக்குள் தொக்கி நின்றது. நல்ல நிலைமைக்கு வந்ததும் போலீஸ் கான்ஸ்டபிள்கள் குடும்பத்தினருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போதே தீர்மானித்தார். 

அதன்படி, ராஜஸ்தான் போலீஸ் கான்ஸ்டபிள்கள் பிள்ளைகள் படிப்பதற்காக சுமார் ஆறு கோடி ரூபாய் மதிப்பில் தந்தையின் பெயரில் கல்வி அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார். அறக்கட்டளை தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிலிருந்து மனைவி லிண்டாவுடன் ஜெய்ப்பூர் வந்துள்ளார். தொடக்க விழாவில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்த்ரா ராஜே பங்கேற்றார்.

``ராஜஸ்தான் மாநிலத்தின் சாதாரண கான்ஸ்டபிளிலிருந்து எஸ்.பி வரை குழந்தைகள் படிப்பற்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். ஹோம்கார்டுகளின் குழந்தைகள் படிக்கவும் இந்த அறக்கட்டளையில் நிதி வழங்கப்படும். ராஜஸ்தான் போலீஸ் துறைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அந்த நன்றியைத் திருப்பிச் செலுத்தவேண்டிய தருணம் இது. என் தந்தை வைத்திருந்த ரசீதுதான் இந்த அறக்கட்டளை தொடங்க காரணம். என் தந்தை, நேர்மையையும் உழைப்பையும் மட்டுமே கற்றுத்தந்தார். உழைப்புதான் என்னை என் தந்தையின் பெயரிலேயே அறக்கட்டளையைத் தொடங்கவைத்துள்ளது'' என்கிறார்

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்